அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று(ஜூன் 20) சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய அவர், ”நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழ் மொழி தான் தாய். தமிழ்நாட்டில் ராஜ ராஜ சோழன், சேரர்கள் கடற்படையில் திறமையாக விளங்கினார்கள். திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டிற்கு இன்று நான் வந்துள்ளேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
திருக்குறளில் உள்ள சிறந்த வரிகள் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. சித்தர்கள், ஆழ்வார்கள் இந்த பூமியில் உள்ளனர் என்பது பெருமையாக உள்ளது.
பழமை வாய்ந்த செங்கோல் என்ற சொல் தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் தெரிந்திருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் செங்கோலை நிறுவிய பிறகு மொத்த இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் செங்கோலின் பெருமை தெரியவந்துள்ளது. அதன் பிறகு ஒரு புதிய வரலாறு தமிழகத்திற்காக எழுதப்பட்டுள்ளது.
திமுகவின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்திருக்கிறது. ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள். தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சியில் பெருமளவு ஊழல் நடக்கிறது.
பாஜக மக்கள் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது. பிற கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க கட்சி நடத்துகின்றன.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மத்தின் படி அதிமுகவுக்கு உரிய மரியாதை அளிக்கத் தயாராக இருக்கிறோம். இலங்கையில் கைது செய்யப்பட்ட 1600 மீனவர்கள் 300 படகுகளை மீட்டுள்ளோம். இலங்கை தமிழர்கள் நலமுடன் இருக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கிறார்” என்று கூறினார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
’பாஜக என்ற காட்டுத்தீயை அணைக்கவே பாட்னா செல்கிறேன்’: கலைஞர் கோட்டத்தில் ஸ்டாலின்
செந்தில் பாலாஜி கைது: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!