இந்தியா கூட்டணி என்ற போர்வையில்… ஸ்டாலின் மீது எடப்பாடி காட்டம்!

Published On:

| By Kavi

ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிமுக சார்பில் கருப்பையா போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 6) திருச்சியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “அதிமுகவை பற்றி முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துக் கொண்டிருக்கிறார். ஏதோ இந்த நாட்டை இந்தியா கூட்டணி தான் ஆளப்போகிறது என்பதைப் போலவும் அதில் திமுக முதன்மையாக விளங்குவது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

2019  நாடாளுமன்றத் தேர்தலில், சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் மேடையில் வைத்துக்கொண்டு, அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என்று ஸ்டாலின் சொன்னார்.

அவர் சொன்னதும் சொன்னார், அந்த தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்துவிட்டது.

இப்போதும் இந்தியா கூட்டணி, இந்தியா கூட்டணி என்று பேசிக் கொண்டிருக்கிறார். அவர் எப்போதெல்லாம் இப்படி பேசுகிறாரோ அப்போதெல்லாம் ஒரு ஒரு கட்சி வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க முதன்முதலில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தான் ஏற்பாடு செய்தார். அந்த கூட்டணியின் முதல் இரண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் மூன்றாம் கூட்டம் நடந்தபோது அந்த கூட்டணியை விட்டு பாஜகவுக்கு  சென்றுவிட்டார்.

இந்தியா கூட்டணியில் ஒரு ஒருங்கிணைப்பு இல்லை.

ஒரு ஒருங்கிணைப்பு இல்லாதவர்கள் பிரதமர் வேட்பாளரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்?. இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லவில்லை.

டெல்லியில் ஆம் ஆத்மியும் காங்கிரசும் இணைந்து போட்டியிடுகிறது. பஞ்சாபில் இந்த இரு கட்சிகளும் போட்டா போட்டி போடுகின்றன. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.

இதைவிட வேடிக்கை என்னவென்றால், ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்தே இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது.

ஸ்டாலின் சேர்ந்ததால் தான் இந்தியா கூட்டணி இப்படி இருக்கிறது. அவர் இல்லை என்றால் இந்த கூட்டணி வலுவாக இருக்கும்.

காரின் டயர் கழன்று செல்வது போல இந்தியா கூட்டணி கட்சிகள் சென்று கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் ஸ்டாலின் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார். அதனால் இந்தியா கூட்டணி என்ற போர்வையில் இந்த தேர்தலை சந்திக்கிறார்.

இந்தியா கூட்டணி என்ற போர்வை இல்லை என்றால் ஸ்டாலின் டெபாசிட் கூட வாங்க மாட்டார். நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்குவது கஷ்டம்.

இந்தியா கூட்டணியை முன்னிறுத்தி ஸ்டாலின் தந்திரம் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் அதிமுக அப்படியல்ல. பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். அது ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை. கள்ளத்தொடர்பு, கள்ள கூட்டணி என்றெல்லாம் விமர்சிக்கிறார்.

அவர்களுக்கு வேண்டுமானால் இந்த எண்ணம் இருக்கலாம். ஆனால் அதிமுகவில் யாருக்கும் அப்படி ஒரு எண்ணம் கூட கிடையாது.

பாஜகவில் இருந்து வெளியே வந்ததும் ஸ்டாலினுக்கு எரிச்சல். நாங்கள் கூட்டணி வைக்கிறோம் அல்லது விலகுகிறோம் இதெல்லாம் எங்களுடைய இஷ்டம்.

எங்கள் கட்சி தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நாங்கள் செயல்படுத்துகிறோம்.

என்று பாஜகவில் இருந்து விலகினோமோ அன்றையிலிருந்து கள்ளத்தொடர்பு கள்ளத்தொடர்பு என்றே விமர்சிக்கிறார்.

ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று எண்ணியிருந்தால் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்திருப்போம். ஆட்சி அதிகாரம் எங்களுக்கு முக்கியமில்லை மக்கள் தான் எங்களுக்கு முக்கியம்” என்று குறிப்பிட்டார்.

பிரியா

Jyothika: நடிப்பில் உருவாகும் இரண்டாம் பாகம்… எந்த படம்னு பாருங்க!

இந்தியர்கள் மூன்றில் இருவருக்கு… உயர் ரத்த அழுத்த பாதிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share