கோவையை தொடர்ந்து விருதுநகரில் ஸ்டாலின் கள ஆய்வு!

Published On:

| By Kavi

கோவையை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக்காக விருதுநகர் செல்லவுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கடந்த நவம்பர் 5, 6ஆகிய தேதிகளில் கோவை சென்று கள ஆய்வில் ஈடுபட்டார். கோவையில் புதிய ஐடி பார்க்கை திறந்து வைத்ததை தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் கோவை பயணம் தொடர்பாக  முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 7) திமுகவினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, களஆய்வின் முதல் நிகழ்வான எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைப்பதற்குச் செல்வதற்காகப் புறப்பட்டபோது, 6 கிலோமீட்டர் நெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்.

மக்கள் என்னை பார்த்து புன்னகைத்து, கையசைத்து, “அடுத்ததும் உங்க ஆட்சிதான்” என்று மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட தி.மு.க எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காலத்திற்கேற்ற வளர்ச்சிக் கட்டமைப்புகளை உருவாக்குவது வழக்கம்.அந்த வகையில், 2009-ஆம் ஆண்டு கோவையில் டைடல் பூங்காவை கலைஞர் திறந்து வைத்தார்.

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி ஐ.டி. காரிடார் (ஓ.எம்.ஆர். சாலை) போல கோவையில் டைடல் பூங்கா பகுதி தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த இளைஞர்களின் வாழ்வுக்கு வளமான எதிர்காலத்தைக் கட்டமைத்துத் தரும் இடமாக இன்று உருவாகியுள்ளது.

ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் அங்கே உருவாகியிருப்பதையும், கோவையையும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களையும் சேர்ந்த பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதையும் கண்ட மனநிறைவுடன் எல்காட் நிறுவனத்தின் சார்பிலான புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அந்தத் துறையின் அமைச்சரும் பன்னாட்டு அளவில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறிந்தவருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் பங்கேற்றேன்.

டைடல் பூங்காவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்கூட்டியே பதிவு செய்து, தங்கள் பணியினைத் தொடங்கி, இளைஞர்களுக்கு வேலைகள் வழங்க ஆயத்தமாயிருப்பதையும் அறிந்து கொண்டேன்.

அடுத்த நிகழ்வாக, கோவை மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களையும் சார்ந்த மக்கள் சட்டமன்றத் தேர்தலின்போது முன்வைத்த முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றும் நிகழ்வாக, மக்களின் நெஞ்சில் பால் வார்க்கும் நிகழ்வாக அமைந்தது.

தமிழ்நாடு வீட்டு வசதித் திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்ட பகுதிகளில், அதற்கான விலக்களிக்கும் ஆணைகள் கிடைக்கப் பெறாமல் இருந்தவர்கள் தங்களின் நீண்டகால பரிதவிப்பை மனுக்களாக அளித்து வந்தனர். அவர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த உங்களில் ஒருவனான நான், முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சிறப்புப் புகார் பெட்டிகள் அமைத்து, மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுத்திட, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து, 4-10-2024 அன்று உரிய அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு முழுவதுமிருந்தும் கோரிக்கை வைத்த மக்களுக்குப் பெரும் நிம்மதி ஏற்படும் வகையிலான இந்த அரசாணையின்படி, கோவை மாவட்டம் வடக்கு வட்டத்திலும், தெற்கு வட்டத்திலும் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, 5,386 குடும்பங்கள் பயனடையும் வாய்ப்பு உருவானது. தங்களுக்குரிய நிலத்தை விற்கவும் வாங்கவும் முடியாமல் பல ஆண்டுகளாகத் தவித்த மக்களுக்குத் திராவிட மாடல் அரசு வழங்கிய நிம்மதிப் பரிசுதான் இந்த நில எடுப்பு விலக்களிப்பு ஆணை.

அதனை வழங்குகிற விழாவில் துறையின் அமைச்சர் சு.முத்துசாமியும் பங்கேற்று, எவ்வளவு அக்கறையுடன் இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து, உரிய சட்டமுறைகளின்படி நிறைவேற்றினோம் என்பதை விளக்கினார். விலக்களிப்பு ஆணைகளைப் பெற்றுக் கொண்ட மக்களின் நன்றி அவர்களின் கண்களில் துளிர்த்ததைக் கண்டேன்.

நவம்பர் 6-ஆம் நாள் அரசு திட்டங்கள் தொடர்பான கலந்தாய்வு நிகழ்வாக கோவையில் புதிய நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. 2021-இல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கோவைக்குப் பல முறை வந்துள்ளேன். நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்காக மூன்று முறை வந்துள்ளேன். சில நாட்களுக்கு முன், மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் கோவையில்தான் தொடங்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்டம்தோறும் கள ஆய்வுப் பணி என்பதும் கோவையில்தான் தொடங்கியுள்ளது என்பதை அந்த நிகழ்வில் குறிப்பிட்டு, கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள மேலும் ஒரு தகவல்தொழில்நுட்பப் பூங்கா, உயர்மட்ட மேம்பாலச் சாலை நீட்டிப்பு, யானைகளால் பயிர்ச்சேதங்களைத் தவிர்த்திட நவீன வேலி, கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு விளக்கமாக உரையாற்றினேன்.

கோவையில் பொதுமக்களின் மகிழ்ச்சியையும், உங்களின் உற்சாகத்தையும் கண்டேன். நெஞ்சம் நிறைந்தேன். மக்களின் பேரன்பில் கோவை மாவட்டக் களஆய்வு மகிழ்வாக அமைந்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை வழங்கி, நவம்பர் 9, 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப் பணியினை மேற்கொள்கிறேன்.
கோவையில் தொடங்கினேன்! தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன்” என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

’கமல் ஹாசன் தமிழ் சினிமாவின் அடையாளம்!’ – நடிகர் சூர்யா வாழ்த்து

‘கங்குவா’ படத்துக்கு வந்த சிக்கல்… கடனை அடைப்பதாக ஸ்டுடியோ கிரீன் உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share