சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்தை பார்த்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சிறுவர்களான பொன்வேல், சேகர்,கலையரசன், திவ்யா துரைசாமி, மலையாள நடிகை நிகிலா விமல் இணைந்து நடித்துள்ள வாழை படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாகி 9 நாள் கடந்திருக்கும் நிலையில், ரூ18.8 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இப்படத்தை பார்த்துவிட்டு பலரும் கண்ணீருடன் தியேட்டரில் இருந்து செல்வதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் வாழை படத்தை பார்த்துள்ளார்.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 2) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள்
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி.
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன்.
காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!
தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
முதல்வரின் ட்விட்டை பகிர்ந்து மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார்.
முன்னதாக அவர், “அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்!
தங்களது உழைப்பாலும் – அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரன் எவ்வளவு தெரியுமா?
கோட்… டிக்கெட் விலை 500 முதல் 1000 ரூபாயா?