ஆளுநர் ரவி மற்றும் அண்ணாமலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். stalin warning to rn ravi annamalai
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, திமுக சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இன்று (பிப்ரவரி 8) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புள்ளி விவரங்களில் தமிழகம் முதலிடம்!
இதில், முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், “2021 சட்டசபை தேர்தலின் போது என் மேல் நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். கடந்த மூன்றாண்டு காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக வளர்த்தெடுத்து வருகிறோம். பல்வேறு புள்ளி விவரங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மூன்றாண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தனியார் முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய குறிக்கோளுடன் உழைத்து வருகிறோம்.
பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் தமிழகம் வளர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசு மட்டும் ஒத்துழைப்பு கொடுத்தால், கொடுத்திருந்தால், இன்னும் வேகமாக தமிழகம் வளர்ந்திருக்கும்.

திருக்குறள் மட்டும் போதுமா? stalin warning to rn ravi annamalai
மத்தியில் மைனாரிட்டி ஆட்சியை பாஜக அமைத்தாலும், பழைய மாதிரியான அதே பாசிச, சர்வாதிகார போக்கில் தொடர்கிறது.
மதக்கலவரத்தை தூண்டி வாக்கு அரசியல் நடத்துகிறது பாஜக. மக்களுக்கான வளர்ச்சி என்பது எதுவும் இல்லாததால் தான் பட்ஜெட்டில் எதுவும் இல்லை.
திருக்குறள் மட்டும் பட்ஜெட்டில் இருந்தால் போதுமா? பேரு தான் மத்திய பட்ஜெட். ஆனால் அந்த பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களின் பெயரும் இடம்பெற்றிருக்கா? அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் வகையில் தான் பட்ஜெட் அமைந்துள்ளது.
4 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பே பட்ஜெட்டில் இல்லை. கல்விக்கு 2.3 சதவீதமும், சுகாதாரத்துக்கு 1.8 சதவீதமும் தான் ஒதுக்கியுள்ளார்கள். பாதுகாப்புக்கு 4.19 லட்சம் கோடியும், உள்துறைக்கு 2.33 லட்சம் கோடியும் கொடுத்துள்ளது .
ஆனால் சமூகநலத்துறைக்கு வெறும் ரூ.60 ஆயிரம் கோடிதான் கொடுத்திருக்கிறார்கள். ஆக, மக்கள் வளர்ச்சியில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதற்கு இதை விட சாட்சி வேண்டுமா?
பட்டியல், பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு குறைவு, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை, எல்.ஐ.சி.,யை ஒழிக்க முயற்சி, உரம் மற்றும் பெட்ரோலிய மானியம் குறைப்பு, சமையல் எரிவாயு மானியம் இல்லை என்பது தான் இந்தப் பட்ஜெட்டில் இருக்கிறது.
ரூ.12 லட்சம் ஆண்டு வருமானம் இருக்கிறவர்களுக்கு வருமான வரிச்சலுகை என அறிவித்துள்ளார்கள். இந்தியாவில் மக்கள் தொகை 140 கோடி. அதில், 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு தான் இந்த சலுகை. இதையே பெரிய சாதனையாக காட்டுகிறார்கள்.

கடன் தருவது தான் கூட்டாட்சியா?
அனைத்து மாநிலங்களுக்கான மத்திய பட்ஜெட் என்று சொல்லிவிட்டு, பீகார் மாநிலத்தின் பெயரை மட்டும் 6 முறை அறிவிக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏனெனில் அங்கு தான் சட்டசபை தேர்தல் வருகிறது. கடந்த முறை தேர்தல் நடைபெற இருந்த ஆந்திராவின் பெயரை சொன்னார்கள். பீகார், ஆந்திராவுக்கு திட்டம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழகத்தை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம். stalin warning to rn ravi annamalai
தமிழ்நாட்டுக்கான புதிய சிறப்பு திட்டம், ரயில்வே திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு என எந்தவொரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு இல்லை.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, ‘நீங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? இல்லை, தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவது பெருமையா?’ உங்களுடைய மனசாட்சிக்கே இந்தக் கேள்வியை விட்டு விடுகிறேன். stalin warning to rn ravi annamalai
மாநிலங்களுக்கு நிதி தராத மத்திய அரசு, வட்டியில்லா கடனை கொடுக்கிறது. வடக்கில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக் கடையா? தந்தை தன் பிள்ளையின் படிப்புக்கு உணவு தராமல், கடன் தருகிறேன் என்று சொல்வாரா? அதற்கு பெயர் குடும்பமா? என்று கேட்போம். மாநிலங்களுக்கு நிதி தராமல், கடன் தருகிறேன் என்று கூறுவதுதான் கூட்டாட்சியா?
இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தமிழகத்தை வஞ்சிப்பது ஏன்? பாஜகவுக்கு தமிழகத்தை பிடிக்கலையா? பாஜகவிற்கு வாக்களிக்க மறுக்கிறது என்பதற்காக நீங்கள் வேண்டுமானால் நிதியைக் கொடுக்காமல் இருக்கலாம். நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். நீங்கள் வஞ்சிப்பவராக இருக்கலாம். நாங்கள் வாழவைப்பவர்கள்.

ஆளுநரின் கெட்ட எண்ணம்!
மத்திய அரசு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழை அவமதிப்பதையே வழக்கமாக கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் பேசுகிறார். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்ற வகையில் ஆளுநர் பேசுகிறார்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து, ’சென்னை, இந்தியாவிற்கே முன்னோடி’ என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாராட்டுகிறார். ஆனால், ஆளுநர் கெட்ட எண்ணத்துடன் விமர்சிக்கிறார். stalin warning to rn ravi annamalai
மத்திய அரசு தயாரித்து வழங்கிய உரையை குடியரசுத்தலைவர் வாசித்தார். இதை பிரதமரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் மாநில அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் வாசிக்காமல் முரண்டு பிடிக்கிறார். இதை உச்சநீதிமன்றமே விமர்சித்துள்ளது.
திமுக ஆட்சி இருக்கும் வரையில் ஆளுநராக ரவியும், பாஜக மாநில தலைவராக அண்ணாமலையும் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர்களே பிரச்சாரம் செய்து நம்மை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள். stalin warning to rn ravi annamalai
தமிழ்நாட்டில் வளர்ச்சியை ஆளுநர் மட்டுமல்ல, எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. அதனால் தான் எப்படியாவது கலவரம் ஏற்படுத்த செயல்படுகிறார்கள். திருந்துங்கள் இல்லையென்றால் திருத்தப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன்.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது!
பல்வேறு நம்பிக்கை, வழிபாடு கொண்ட மக்கள் இருந்தாலும், இங்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆன்மிகம் வேறு, அரசியல் வேறு எனும் பகுத்தறிவு உடைய மக்கள் வாழும் மாநிலம் நம் தமிழ்நாடு. மதத்தை வைத்து குழப்பம் ஏற்படுத்துபவர்களை நம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது.
கும்பமேளாவுக்கு சென்றவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது பாஜக அரசின் கடமையல்லவா? ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு தராமல், கொன்றது ஏன்? உங்கள் மதவாத கவலை ஏன் அங்கு இல்லை? stalin warning to rn ravi annamalai
சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து கைவிலங்கிட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அதனை நியாயப்படுத்தி விளக்கமளித்து பேசுவது தான் நீங்கள் இந்தியர்களை காப்பாற்றும் முறையா? விஸ்வகுரு என சொல்லிக்கொள்ளும் மோடி அமெரிக்கா அரசுடன் இந்தியர்களின் நிலை குறித்து பேசியிருக்க வேண்டாமா? stalin warning to rn ravi annamalai
ஒன்றிய ஆட்சியாளர்களே நீங்கள் வஞ்சிப்பவர்கள். நாங்கள் வாழவைப்பவர்கள். பேரிடர் நிதியை கூட கொடுக்க முடியாத அளவுக்கு உங்கள் இதயம் இரும்பாகிவிட்டதா? தமிழ்நாடு என்று சொன்னாலே உங்கள் நாக்கு தீட்டாகிடுமா? மேலே இருப்பதாக நினைத்து ஆடாதீர்கள். கீழே நாங்கள் உறுதியாக இருந்தால் தான் நீங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் அனைத்திற்கும் 2026ல் மக்கள் உங்களுக்கு பதிலடி கொடுப்பார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.