கள்ளச்சாராயம் அருந்தி மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் அருந்தி மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் 9 பேரும், போலி மதுபானம் அருந்தி செங்கல்பட்டில் 5 பேரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக கள்ளச்சாராய வேட்டையில் தமிழக காவல்துறை தீவிரமாக இறங்கி இதுவரை 200க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்தது.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் இன்று (மே 15) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் குலைந்துள்ளது. ஒரு திறமையற்ற பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தால் இப்படிப்பட்ட கொடுமைகளை எல்லாம் மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகியுள்ளதாகச் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தெரிவித்திருந்தேன். இதை அரசாங்கம் சரியாக கவனத்தில் எடுத்திருந்தால், இன்றைக்கு இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம். இதற்கெல்லாம் முழு பொறுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் தான். எனவே முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெறுகிறது. கஞ்சா விற்பனையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நாளை (மே 16) காலை மரக்காணம் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளேன். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் ஆறுதல் சொல்ல இருக்கிறேன்.
அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் கடையைத் திறப்பார்கள். ஆனால் இப்போது, 24 மணி நேரமும் பார் திறந்திருக்கிறது. போலி மதுபானங்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வரும் வருமானத்தை மட்டும் தான் அரசு பார்க்கிறதே தவிர மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சிந்திக்கவில்லை.
500 மதுபான கடைகளை மூடுவதாக சொல்லி 1000 சில்லறை மதுபான கடைகளை திறக்கிறார்கள். அதனால் தான் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. தானியங்கி மதுபான இயந்திரம், திருமண மண்டபத்தில் மதுபானத்திற்கு அனுமதி வழங்கியது இந்த அரசு தான். மதுவை ஊக்குவிக்கிற அரசாக ஸ்டாலின் அரசாங்கம் இருக்கின்றது.
எனவே, தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சரும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.
மோனிஷா
விழுப்புரம் மாவட்டத்திற்கு விரைந்த முதல்வர்
கல்லா கட்டாத ‘கஸ்டடி’: கிண்டல் செய்யும் சமந்தா ரசிகர்கள்!