“ஒன்றிய அரசை பார்த்து கீச்சு குரலில் கூட பேச முடியல” : எடப்பாடியை கிண்டல் செய்த ஸ்டாலின்

Published On:

| By Kavi

ஒன்றிய பாஜக அரசை பார்த்து ‘கீச்சு’ குரலில் பேச கூட எடப்பாடி பழனிசாமிக்கு துணிச்சல் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஈரோடு சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இன்று (டிசம்பர் 20) சோலாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ரூ.951 கோடியில் 559 திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார்.

ரூ.133 கோடியில் 222 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.284 கோடியில் 50,088 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “ஈரோட்டு மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றுக்கான தொடக்கம். பெரியாரை கொடுத்த மண். பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாமல் இந்த இயக்கம் இல்லை” என்றார்.

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா குறித்து பேசிய அவர், “காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இழப்பு ஈரோடு தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய இழப்பு. இன்று அவர் நம்முடன் இருந்திருந்தால் நமது திட்டங்களை எடுத்துச் சொல்லியிருப்பார். இந்த கூட்டத்தின் வாயிலாக அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்றார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்துகிறது. அதனால் மக்கள் ஆதரவு திமுகவுக்கு இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெறிச்சல். நியாயமான குற்றச்சாட்டுகள் இருந்தால் சொல்லலாம். ஆனால் திமுக ஆட்சி மீது குற்றம்சாட்ட எதுவும் இல்லாததால் பழனிசாமி பொய் சொல்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றியிருக்கிறோம். இரவு பகல் பார்க்காமல் அரசு இயந்திரம் வேலை செய்தது. மழைக்கு பிறகு என்னென்ன செய்ய வேண்டுமொ அதை எல்லாம் செய்துக்கொண்டிருக்கிறோம்.

ஒன்றிய அரசின் நிதி வருகிறதா இல்லையா என்று கூட பார்க்காமல் மாநில அரசே எல்லாம் செய்துகொண்டிருக்கிறது. இதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் கற்பனை குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லியிருக்கிறார்.

முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்துவிட்டதாக பொய் சொல்லுகிறார் பழனிசாமி. ஆனால் 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. முன் கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டதால் தான் பெரிய அளவில் உயிரிழப்பை தவிர்த்திருக்கிறோம்.

ஆனால் அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்துவிட்டதால் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 23 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. இதையெல்லாம் மறக்க முடியாது.

அப்போது இருந்த அமைச்சர்கள் யாரும் களத்துக்கு கூட போகவில்லை. தன்னார்வலர்கள் தான் வேலை செய்தனர். மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவு என்று செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது பற்றி சிஏஜி அறிக்கை கூறியுள்ளது.

இந்த நிலையில் சாத்தனூர் அணை குறித்தான எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் ஆதாரத்தோடு அது பொய் என அம்பலப்படுத்தினோம்.

அடுத்ததாக டங்ஸ்டன் சுரங்கத்தை எடுத்துக்கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்லாமல் மாநில அரசை குறை சொல்கிறார். கவுண்டமணி – செந்தில் வாழைப்பழ காமெடி போல் சட்டமன்றத்தில் சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னார். அப்போது நான் முதலமைச்சராக இருக்கும் வரை இந்த திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியாக கூறினேன்.

சொல்லபோனால் இந்த திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது அதிமுகதான்.
இன்னொன்று சொன்னார்… அரசை விமர்சனம் செய்து அவர் சத்தம்போட்டு வாய் கிழிய பேசினார் என்று. அதை ஒளிபரப்பு செய்திருந்தால் இந்த ஆட்சியே கலைந்துபோய்விடும் என்றார். என்ன காமெடி இது.

நீங்கள் உருண்டு புரண்டு சொன்னாலும் அதில் உண்மை இல்லை. காலியான குடம் உருண்டால் சப்தம் அதிகமாகத்தான் வரும். பழனிசாமி என்னதான் கத்திக் கூப்பாடு போட்டாலும் அதில் உண்மை இருக்காது. இன்னொன்று சொல்கிறேன் பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்க முடியாது.

திமுகவை பார்த்து சத்தமா ‘கத்தி’ பேசும் உங்களுக்கு, ஒன்றிய அரசை பார்த்து ‘கீச்சு’ குரலிலாவது பேச துணிச்சல் இல்லையா?. ஏனென்றால் மடியில் கனம்… அதனால் பயம்” என்று கடுமையாக விமர்சித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

நகை வாங்க நல்ல சான்ஸ்… மூன்றாவது நாளாக குறைந்த தங்கம் விலை!

ராகுல் எங்கே நின்றார் தெரியுமா?: வீடியோ வெளியிட்டு ஜோதிமணி விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share