பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 9) தொடங்கி வைத்தார். அதோடு பொங்கலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையும் முன்கூட்டியே இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த 3ஆம் தேதி முதல் அதற்கான டோக்கன்களை அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் தலைமையில் ரேசன் ஊழியர்கள் வீடுவீடாக சென்று விநியோகம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் உள்ள ரேசன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 9) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன், எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகின்றனர். இதனை வரும் 13 ஆம் தேதி வரை பொதுமக்கள் டோக்கன்களில் உள்ள தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்கூட்டியே வந்த ஆயிரம்!
இதற்கிடையே பொங்கல் திருநாளையொட்டி முன்கூட்டியே மகளிர் உதவி தொகையானது, 1.14 கோடி குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் இன்று காலை 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 14 அல்லது 15 ஆம் தேதிகளில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், இந்தாண்டு முன்கூட்டியே ரூ.1000 வந்தது குடும்பத்தலைவிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?
திருப்பதி தரிசன டிக்கெட் பெற அலைமோதிய கூட்டம் : கண்முன்னே பலியான மனைவி… கதறும் கணவர்