விஜய், ஆதவ் மீது விமர்சனம்: அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் திடீர் உத்தரவு!

Published On:

| By Aara

விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் குறித்து திமுகவின் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஊடகங்களில் பேசி வருவது குறித்து, அக்கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு ஒன்றை இன்று (டிசம்பர் 8) பிறப்பித்திருக்கிறார்.

டிசம்பர் 6 ஆம் தேதி நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ‘ இறுமாப்பு 200 என்ற  திமுகவின்  கணக்கை வரும் தேர்தலில்  மக்களே மைனஸ் ஆக்குவார்கள்” என்று பேசினார். மேலும், திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வராததற்கு காரணம் திமுகவின் அழுத்தம்தான் என்றும் குறிப்பிட்டார்.

விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியபோது, ‘2026 இல் மன்னராட்சியை ஒழிப்போம். இனி பிறப்பால் யாரும் தமிழகத்தில் முதல்வராக முடியாது. ஒட்டுமொத்த சினிமா உலகமே இன்று ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று துணை முதல்வர் உதயநிதியை கடுமையாக தாக்கினார்.

இதுகுறித்து நேற்று டிஜிட்டல் திண்ணையில், ‘அப்பாவிடம் கேட்கச் சொன்ன உதயநிதி…  ஸ்டாலினை நெருக்கும் மா.செ.க்கள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதற்கிடையில் அமைச்சர்கள் முதல் பல நிர்வாகிகள் வரை விஜய்க்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் எதிராக கருத்துகளை  பேட்டிகள் மூலமாகவும் சமூக தளங்களில் வெளியிட்டனர்.

‘நான் சினிமா செய்திகள் பாக்கறதில்லை’ என்றும், ‘அந்த ஆளுக்கு அறிவு இல்ல’ என்றும் விஜய், ஆதவ் அர்ஜுனா குறித்து துணை முதல்வர் உதயநிதியே கோபமாக பேசினார்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்பி, ‘இறுமாப்புடன் சொல்கிறேன் 200க்கு மேல் வெல்வோம்’ என்று கூறினார்.

களத்துக்கு வராத தற்குறி என்று விஜய்யை அமைச்சர் சேகர்பாபு தாக்கினார். 

அமைச்சர் தா.மோ. அன்பரசன், ‘ தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுக்கும் பிளாக் டிக்கெட்டுக்கும் போட்டி நடக்கிறது” என்று விமர்சித்தார்.

இதேபோல ரகுபதி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட பல அமைச்சர்கள் விஜய் பற்றியும், ஆதவ் அர்ஜுனா பற்றியும் பேட்டியளித்தனர்.

 இது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் திமுக தலைமை நிலையமான அறிவாலயத்தில் இருந்து இன்று (டிசம்பர் 8) அக்கட்சியின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

அதில்,

 “அரசியல் களத்தில் நம் மீது எவரேனும் விமர்சனங்களை முன்வைக்கும் போது, அதற்கு பதில் அளிப்பதாக ஒவ்வொருவரும் பதில் சொல்லத் தொடங்கினால் நாமே அச்செய்திக்கும் – அந்நபருக்கும் ஊடக முக்கியத்துவம் அளிப்பதாகிவிடும்.

எனவே, கழகத்தலைமை யாருக்கு பதில் சொல்கிறதோ அவர்களுக்கு மட்டும் அதனையொட்டி அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவெளியிலும் ஊடகத்திலும் பதில் சொல்லலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

சமூக ஊடகங்களில் மட்டுமே பதில் சொல்லத் தேவையான செய்திகளுக்கு சமூக ஊடகங்களில் செயல்படும் ஐடி விங், நம் கழக ஆதரவாளர்கள் பதில் சொன்னால் போதுமானதாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பேட்டி கொடுத்து விஜய்யையும், ஆதவ் அர்ஜுனாவையும் பெரிய ஆள் ஆக்காதீர்கள் என்பதுதான் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் உத்தரவின் சாராம்சம்!

ஆரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆஸ்திரேலியாவின் அபார வெற்றியால் இந்தியா பின்னடைவு! மோசமான சாதனை பட்டியலில் ரோகித்

திமுகவை வீழ்த்த இது தான் வழி… கஸ்தூரி சொன்ன ’அடே’ ஐடியா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel