டிஜிட்டல் திண்ணை: சலசலப்பு…கசப்பு: ஸ்டாலின் கூட்டிய திடீர் கூட்டணிக் கூட்டம்! 

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும், ‘அதிமுக கூட்டணிக்குள் ஏகப்பட்ட கடமுடாக்கள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணி ரொம்ப அமைதியாக  இருக்கிறதே. அங்கே ஒன்றும் சம்பவங்கள் இல்லையா?’ என்ற சில கேள்விகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

 “அதிமுக கூட்டணிக்குள் இருக்கும் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து வரும் நிலையில் திமுக கூட்டணிக்குள் லேசாக எட்டிப் பார்த்த சலசலப்புகளுக்கு  சட்டென முடிவுகட்டப்  பார்த்திருக்கிறார் திமுக தலைவரும் கூட்டணித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

திமுக கூட்டணிக்குள் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள்,  மதிமுக,  கம்யூனிஸ்டுகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மமக உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆட்சிக்கு வந்த சுமார் இரண்டு வருட காலங்களில்  வாரியங்கள் நியமனம், அரசு வழக்கறிஞர்கள் நியமனம் உள்ளிட்ட எந்த விஷயத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என்ற வருத்தத்தில்தான் இன்னும் இருக்கின்றன.

அதே நேரம் சில முக்கியமான மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக முதல்வரை உடனடியாக தொடர்பு கொண்டு அவசியமான சில செய்திகளை அவரிடம் சேர்க்க வேண்டிய நிலையிலும்… கூட்டணி கட்சி தலைவர்களாலேயே முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற கருத்தும் அவர்களிடம் இருக்கிறது.

இந்த நிலையில் தான் கடந்த மார்ச் 1ஆம் தேதி சென்னையில் நடந்த முதலமைச்சர் ஸ்டாலின் எழுபதாவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பிற மாநில தலைவர்களான அகிலேஷ் யாதவ், தேஜஸ்ரீ யாதவ்,  ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் மேடை ஏற்றப்பட்ட நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் அந்த மேடையில் அமர வைக்கப்படவில்லை.
’தமிழ்நாட்டில் கடந்த நான்கு தேர்தல்களாக நாங்கள் வெற்றி பெற்று வருவதற்கு காரணம் ஒற்றுமைதான்’  என்று அந்த பிறந்தநாள் விழா மேடையில் ஸ்டாலின் பெருமிதமாக அறிவித்தார். இந்த பெருமித அறிவிப்புக்கு அடிப்படை தமிழ்நாட்டில் திமுகவுடன் அனுசரணையாக இருக்கும் கூட்டணி கட்சிகள் தானே… கூட்டணி கட்சித் தலைவர்களை பிற மாநில கட்சி தலைவர்கள் வரும்போது ஏன் மேடையேற்றவில்லை என்ற கேள்வி அந்தக் கூட்டத்தின் போதே கூட்டணி கட்சி பிரமுகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.

இதற்கு ஒரு நாள் முன்பாக பிப்ரவரி 28-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவுக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் தான்,  ’பதவி எனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியையே இரண்டு வருடங்களில் ராஜினாமா செய்தவன்’ என்றும் ஆவேசமாக பேசினார். ’தமிழ்நாட்டில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியின் வாகனத்தை மறித்து தாக்க வந்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?’ என்று காவல் துறையை நோக்கி கேள்வி கேட்ட திருமாவளவன்,  ’இது ஸ்டாலின் போலீசா அல்லது அமித்ஷா போலீசா?’ என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இந்த ஆவேசத்திற்கு இன்னொரு காரணம் பிப்ரவரி 27ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை டெல்லியில் தனிப்பட்ட முறையில் சந்தித்ததும் தான் என்கிறார்கள் கூட்டணி வட்டாரத்தில். உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது பற்றி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தங்களது டெல்லி தொடர்புகளிடம் ஆர்வமாக விசாரித்துள்ளனர்.
ஒருவேளை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்க தேவையான உறுப்பினர்கள் கிடைக்கப் பெறாவிட்டால் திமுக ஆதரவளிக்க திட்டமிடுகிறது என்றும், அதற்காக இப்போதே வரும் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை மேலும் குறைக்க தயாநிதிமாறன் உள்ளிட்டோர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகிறார்கள் என்றும் பேச்சுகள் எழ ஆரம்பித்தன.  இதெல்லாம் சேர்ந்துதான் பிப்ரவரி 28ஆம் தேதி திருமாவளவனின் பேச்சில் ஆவேசம் தெறித்தது.

இவற்றையெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் அறியாதவர் அல்லர். இப்படிப்பட்ட பேச்சுக்கள் கூட்டணிக்கு உள்ளேயே எழுந்து கொண்டிருப்பதை அறிந்து தான் மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், ’மாநில வேறுபாடுகளை கடந்து பாஜக அரசை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்று பட வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். ’காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி கரை சேர முடியாது’ என்றும் வெளிப்படையாகவே தெரிவித்தார் ஸ்டாலின்.

ஸ்டாலினுடைய இந்த பேச்சால் அரசியல் ரீதியாக கொள்கை ரீதியாக திமுக கூட்டணியினர் ஆறுதல் அடைந்தாலும் தாங்கள் கூட்டணிக்குள் உரிய முறையில் மதிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவர்களிடம் தொடர்ந்தது. இந்த நிலையில் தான் மார்ச்  5 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்ற நிலையில்… முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. அவர் கள ஆய்வு நிகழ்ச்சிக்காக மதுரை சென்று விட்டார்.
ஸ்டாலின் மேடை ஏறும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மேடை ஏற்றப்படவில்லை…  கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மேடை ஏறும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்பது திமுக கூட்டணி தலைவர்களுக்கு ஒரு நெருடலாகவே இருந்தது.

இந்த நிலையில் தான் மார்ச் 9 ஆம் தேதி உங்களில் ஒருவன்  என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ வடிவிலான கேள்வி பதில் நிகழ்ச்சியில் நடப்பு நிகழ்வுகள் பற்றிய கேள்விகளை வைத்து பதிலளித்தவர்,… ‘உங்கள் கூட்டணிக் கட்சியினர் பற்றி ஒற்றை வரியில் சொல்வதானால் என்ன சொல்வீர்கள்?’ என்ற கேள்வி எழுப்பி அதற்கு அவரே, ‘தோள் கொடுப்பான் தோழன் என்பதன் அடையாளம் அவர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது கூட்டணிக் கட்சியினர் வருத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தே இப்படி ஒரு கேள்வி பதிலை கலைஞர் பாணியில் வெளியிட்டார் ஸ்டாலின்.

அத்தோடு விடவில்லை…   மார்ச் 10ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இபிஎஸ் இளங்கோவன் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அருகில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முதல்வரின் ஆலோசனைப்படி அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் அழைக்கப்பட்டனர். வெற்றி பெற்ற இளங்கோவன் காங்கிரஸ்காரர் என்பதால்  காங்கிரஸ்  மாநில தலைவர் கே எஸ் அழகிரி வருகை தந்திருந்தார். அவரோடு திருமாவளவன், வைகோ சார்பில் துரை வைகோ, கே பாலகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் வந்திருந்தனர்.

கூட்டணி கட்சி தலைவர்கள் தன்னை அடிக்கடி சந்திக்க முடியவில்லை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்து இருந்த ஸ்டாலின் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களை ஒன்றாக அழைத்து சில நிமிடங்கள் உரையாடினார்.

அப்போது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டணி கட்சி தலைவர்களை நீங்கள் சந்தித்து உரையாடினால் நன்றாக இருக்கும் என்று முதல்வரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பொதுக் கூட்டங்கள், விழாக்களில் சந்தித்துக் கொள்வது வேறு, கூட்டணிக்குள் நிலவும் பிரச்சனைகள் முக்கியமான விவகாரங்களில் அரசின் முடிவுகள் பற்றி கூட்டணி கட்சி தலைவர்களுடன் உரையாடுவதற்கு என்று குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதுதான் திருமாவளவன், கே பாலகிருஷ்ணன் போன்றோரின் விருப்பம். இதை அவர்கள் முதலமைச்சரிடம் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
நெய்வேலி விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மார்ச் 11-ம் தேதி பந்த் நடத்த இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து முதல்வரை சந்திக்க ஏற்கனவே சில முறை முயற்சித்தனர். நேற்று மார்ச் பத்தாம் தேதி தான் தலைமைச் செயலகத்தில் அந்த சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைத்தது. இதையும் முதல்வரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியை போல வெளிப்படையான வார்த்தை மோதல்கள் வெடிக்க வில்லை என்றாலும் திமுக கூட்டணிக்குள் அதற்கான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இதை உணர்ந்து தான் நேற்று இளங்கோவன் பதவியேற்பு நிகழ்வையே ஒரு கூட்டணி கட்சிகளின் கூட்டமாக மாற்றிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகளுடைய ஒருங்கிணைப்பு முதலமைச்சரின் கையில் தான் இருக்கிறது என்கிறார்கள் திமுக கூட்டணி பிரமுகர்கள்”என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

“ஸ்டாலின் உழைப்பிற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் முதல்வர் பதவி”: ரஜினிகாந்த்

முதல் நாள் திருமணம்: அடுத்த நாள் விவாகரத்து!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *