“ஈரோட்டில் தலைவர் கலைஞருக்கு 3 சிலைகள் அல்ல, 300 சிலைகள்கூட வைப்போம்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். குறிப்பாக, நாளை (நவம்பர் 11) திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழக முதல்வர் இன்று (நவம்பர் 10) பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் கோயம்புத்தூர் சென்றார். பின்னர் ஈரோடு மாவட்டத்தில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், ”திமுக ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா எனும் கொடிய நோயைச் சந்தித்தோம். பின்னர், அதிலிருந்து மீண்டகாலத்தில் 10 நாட்கள் இடைவிடாமல் தொடர் மழையை எதிர்கொண்டோம். மக்களால் முதல்வராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்திலும் மழை பெய்தது. அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது. அது நம்முடைய ராசி. என் ராசி மட்டுமல்ல. உங்களுடைய ராசியும் சேர்ந்ததுதான். இது தந்தை பெரியார் பிறந்த மண். இந்த மண்ணில், தலைவர் கலைஞருக்கு 3 சிலைகள் உள்ளன.
மூன்று என்ன? தலைவர் கலைஞருக்கு 300 சிலைகளைக்கூட இந்த மாவட்டத்தில் வைப்போம். ஒருகாலத்தில் சீர்திருத்த திருமணங்களை கேலி செய்தவர்கள் கொச்சைப்படுத்தியவர்கள் உண்டு. ஆனால் இன்று சீர்திருத்த திருமணம் நடைபெறவில்லை என்றால்தான் ஆச்சரியம்.
அண்ணாதான் சீர்திருத்த திருமணத்தை சட்டப்படி செல்லும் என சட்டப்பூர்வமாக்கினார். நமது ஆட்சியில் மழை தொடர்ந்து மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன் கிடைக்கிறது. தேர்தல் காலத்தில் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். அனைவரும் இந்த ஆட்சிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
மோடி வருகை: தனித்தனியே வரவேற்கும் எடப்பாடி, பன்னீர்
கப்பல் மீட்பு அகதிகள்: விசாரணையில் வெளியான புதிய தகவல்கள்!