தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி பரிமாறிய ஸ்டாலின்

Published On:

| By Kavi

மழையின் போது வெள்ள தடுப்பு பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு விருந்து வைத்து கவுரவித்தார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா இடையே இன்று கரையை கடந்தது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் கனமழை பெய்தது. பல்வேறு இடங்களிலும் தேங்கியிருக்கும் மழைநீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று தினங்களாக சென்னையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இன்று (அக்டோபர் 17) கொளத்தூர் வீனஸ் நகரில் அமைக்கப்பட்ட மழைநீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம். சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயில், கூடுதலாக உபரிநீர் செல்லும் வகையில் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதையும் பார்வையிட்டார் ஸ்டாலின்.

கொளத்தூரில் சிறப்புப் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “எவ்வளவு மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. மழைகால பணிகள் தொடர்பாக எதிர்மறை கருத்துகள் வருவதை பற்றி எனக்கு கவலையில்லை.
மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். ஏறக்குறைய எல்லா இடங்களிலும் தண்ணீர் வடிந்துவிட்டது. எங்களுக்கு தெரியாமல் சில இடங்களில் தண்ணீர் இருந்தால் அதுவும் உடனே அகற்றப்படும். மக்கள் பாராட்டும் அளவிற்கு மாநகராட்சியின் பணி இருந்துள்ளது

இதற்காக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

மழை அளவு குறைவாக இருந்ததால்தான் சென்னைக்கு பாதிப்பு குறைவு என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, “நிச்சயமாக கன மழைதான் பெய்தது. அது மக்களுக்கு தெரியும்” என்று பதிலளித்தார் ஸ்டாலின்.

இதையடுத்து, தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களாக களத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு பிரியாணி பரிமாறி, முதலமைச்சரும் உணவருந்தினார். தொடர்ந்து   அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் உதவிப்பொருட்களையும் வழங்கி கவுரவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ககன மார்கன்’!

”அதிமுக பிரிந்துவிட்டதுனு இனி சொல்லாதீங்க” : எடப்பாடி ஆதங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment