பிரதமர் மோடி இன்று (மார்ச் 4) சென்னைக்கு வருகை தந்தார்.
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் நிகழ்வு மற்றும் சென்னை நந்தனத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக மோடி சென்னை வந்த நிலையில்… தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலையே சென்னையில் இருந்து ரயில் மூலமாக புறப்பட்டு மயிலாடுதுறை சென்றடைந்தார்.
இதற்கு முன் பிரதமர் மோடி பலமுறை தமிழ்நாட்டுக்கு வந்த பொழுது சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்கள் படைசூழ சென்று மோடியை வரவேற்றிருக்கிறார்.
ஆனால் தேர்தல் நெருங்கிவிட்ட இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக, தான் செல்லாமல் தன்னுடைய அமைச்சரவையிலே இருக்கக்கூடிய அமைச்சர் காந்தியை இன்று அனுப்பி வைத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ராணிப்பேட்டையில் என் மண் என் மக்கள் நடைபயணம் செல்லும் போது, அமைச்சர் காந்தியை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். காந்தியின் கடந்த காலம் பற்றி அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது முதல்வர் கவனத்துக்கும் சென்றிருக்கிறது.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை வரவேற்க அமைச்சர் காந்தியை அனுப்பி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ராணிப்பேட்டை திமுகவினர், ‘அண்ணாமலை பேசினதுக்கு நம்ம முதலமைச்சர் எப்படி செயல் மூலமா பதில் சொல்லியிருக்காரு பாத்தியா?’ என்று இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
–வேந்தன்
எம்.பி.பதவியை ராஜினாமா செய்த நட்டா: ஏன்?
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் பயன்படுத்துகிறார்: இபிஎஸ் தரப்பு வாதம்!