“அதனை அவன்கண் விடல்” – ஸ்டாலின் செலக்‌ஷன்… முருகானந்தம் தலைமை செயலாளர் ஆன கதை!

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்லவிருக்கும் நிலையில், தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா மாற்றப்பட்டு முருகானந்தம் பதவி ஏற்றுள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்ற நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 1989 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரி சிவ்தாஸ் மீனா கடந்த ஆண்டு தலைமை செயலாளர் ஆனார்.  காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியாராக பணியை தொடங்கி கோவை, வேலூர், ஈரோடு, நாகை என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியவர். அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு தலைமைச் செயலகத்திலேயே அமலாக்கத் துறை சோதனை நடத்திய காலக்கட்டத்தில் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டவர் சிவ்தாஸ் மீனா.

இவரது பதவி காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் மாற்றப்பட்டு முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் முதன்மை செயலாளராக -1 இருந்த இவர்தான் அடுத்த தலைமைச் செயலாளர் என்று நேற்றே நமது மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன்படியே இன்று (ஆகஸ்ட் 19) தமிழ்நாட்டின் 50ஆவது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் முருகானந்தம்.

யார் இந்த முருகானந்தம்?

1991 பேட்ச் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான முருகானந்தத்தின் பூர்வீகம் புதுச்சேரி.

அண்ணா பல்கலையில் இளங்கலை பி.இ (எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்) பட்டம் பெற்று, லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் எம்.பி.ஏ படித்தார்.

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று 26 வயதிலேயே ஐஏஎஸ் ஆனார். 2001 முதல் 2004 வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.

பிறகு ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர், அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளர் என பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளை வகித்தவர் முருகானந்தம்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதித்துறையில் அமைச்சராக பணியாற்றிய போது, நிதித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

நித்துறையில் அந்த அளவுக்கு அனுபவம் இல்லாத முருகானந்தத்துக்கு நிதித் துறை முதன்மை செயலாளர் பதவியை வழங்கினார் ஸ்டாலின்.  திமுக அரசு முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நிதித்துறை செயலாளராக இருந்தவர்.

எந்த பணியை கொடுத்தாலும் அதில் திறம்பட செயல்படுவார் என்று பெயர் எடுத்தவர் முருகானந்தம். அந்த வகையில் நிதித்துறையில் பணியமர்த்தப்பட்ட முருகானந்தத்தை அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்த பின்னர் பாராட்டினார். பின்னர் பழனிவேல் தியாகராஜனின் அன்புக்குரியவர் ஆனார்.

தமிழ்நாட்டில் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருந்த நிலையில்,  “2022ஆம் ஆண்டு 7 ஆண்டுகளுக்குப்பின் தமிழ்நாட்டில் வருவாய்ப் பற்றாக்குறை குறைந்திருக்கிறது” என்று முருகானந்தம் தெரிவித்திருந்தார்.  2021ஆம் ஆண்டை ஒப்பிடும் போது ரூ.7 ஆயிரம் கோடி முதல் முறையாக குறைந்துள்ளது. மாநில ஒட்டுமொத்த வளர்ச்சியில் 3 சதவிகிதமாக இருக்க வேண்டிய நிதி பற்றாக்குறை, 2021ல் 4.61 சதவிகிதமாக இருந்த நிலையில், 2022ல் 3.8 சதவிகிதமாக குறைந்துள்ளது எனவும் கூறியிருந்தார்.

முருகானந்தம், கொரோனா பரவல் அதிமாக இருந்த போது அதை கட்டுப்படுத்துவதற்கான விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த திறம்பட செயல்பட்டவர் என்றும் பெயர் பெற்றார்.

நிதித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர், கடந்த ஆண்டு முதல்வரின் முதன்மை செயலாளர்- 1 ஆக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மூன்றாவது பட்டியலின தலைமைச் செயலாளர் ஆவார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பத்மநாபன் தலைமைச் செயலாளராக இருந்தார்.

அவரைத் தொடர்ந்து கலைஞர் ஆட்சிக் காலத்தில் 1999ல் ஏ.பி.முத்துசாமி தலைமை செயலாளராக இருந்தார். தற்போது பட்டியலினத்தைச் சேர்ந்த முருகானந்தம் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முருகானந்தத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விசிக எம்.பி.ரவிக்குமார், “தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை கொண்டவர். விழுப்புரம் மாவட்டத்தில் மினி டைடல் பார்க் அமைவதற்கும், சிப்காட் அமைவதற்கும் தனிக் கவனம் எடுத்துக்கொண்டவர். சமூகநீதி, சமத்துவம் என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களை செயல்படுத்துவதில் உறுதிகொண்டவர்.

“ இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறளுக்கேற்ப முருகானந்தத்தை தலைமைச் செயலாளராகத் தேர்வு செய்த முதலமைச்சருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

இதே குறளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதன் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்பது இந்த குறளின் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவேண்டும்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

என்.சி.சி சர்டிபிகேட் கிடையாது: மாணவி பாலியல் வன்கொடுமை… நாம் தமிழர் மாஜி கைது!!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share