கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழ்நாடு அரசு விழா இன்று (மார்ச் 13) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார். மேலும் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “தேர்தல் நேரத்தில் நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு மன உறுதியோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
உங்கள் மகிழ்ச்சி மற்றும் எழுச்சியை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தல் அல்ல, பொதுத்தேர்தல் அல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதில் நாம் தான் என்ற நம்பிக்கை வந்துள்ளது. கோவை மாவட்டத்திற்கு 4 முறை வந்து 1 லட்சத்து 48 ஆயிரத்து 949 நபர்களுக்கு 1441 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 5 வது முறையாக வந்துள்ளேன்.
மூன்று ஆண்டு திராவிட மாடல் அரசின் சாதனைகளை தலைப்புகளாக பட்டியலிட விரும்புகிறேன்” என்று கூறி கொங்கு மண்டல மாவட்டங்களுக்கு செய்துள்ள திட்டப் பணிகளைப் பட்டியலிட்டார். மேலும் இம்மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார் முதலமைச்சர்.
அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
”மேற்கு மண்டலத்தை கோட்டை என சொல்லிக்கொள்ளும் அதிமுக அதன் 10 ஆண்டுகால ஆட்சியில் இதுபோல செய்த சாதனைகளை பட்டியலிட முடியுமா ? வாக்களித்த மக்களுக்கு ஏதாவது ஒரு நன்மையை அதிமுக செய்ததா ?
மகள்களை பெற்ற அனைத்து பெற்றோர்களையும் பதற வைத்தது பொள்ளாச்சி பாலியல் சம்பவம். அதை மறந்துவிட முடியுமா ? பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து தைரியமாக அதிமுக ஆட்சியில் வலம் வந்தார்கள். புகார் கொடுத்தவர்கள் மிரட்டலுக்கு ஆளானார்கள்.
பத்திரிகையாளர்கள் இதுகுறித்து பழனிசாமியிடம் கேட்ட போது அப்படி ஒன்றும் இல்லை , ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என கூறினார். ஆட்சிக்கு வந்ததும் இந்த ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பான் என தேர்தல் நேர பிரச்சாரத்தில் கூறியிருந்தேன்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை கொள்ளை நடந்ததும் அதிமுக ஆட்சியில் தான். அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியதும் அதிமுக ஆட்சிதான். எஸ்.பி போன்றவர்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் இருந்ததும் அதிமுக ஆட்சியில் தான். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்றதும் அதிமுக ஆட்சியில் தான். கஞ்சா , மாமூல் , குட்கா பட்டியலில் அமைச்சரும் , டி.ஜி.பி யும் இருந்தது அதிமுக ஆட்சியில் தான். அதில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யாமல் தடுத்த கூட்டணி தான் தற்போது உத்தமர் வேசம் போடுகிறார்கள். இந்த கூட்டணி மறுபடியும் மக்களை ஏமாற்ற தான் பிரிந்தது போல நடித்து டிராமா செய்கிறார்கள்.
தமிழ்நாட்டு நலனுக்கும் , தமிழர் நலனுக்கும் எதிரான அதிமுக பாஜக கள்ளக்கூட்டணி ஒருபுறம் என்றால் , தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக சக்திகளும் திமுக வும் ஒன்றுபட்டு நிற்கின்றோம். ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாத போதே இத்தனை சாதனை திட்டங்களை கொடுக்க முடிகிறது என்றால் , நமக்கு உதவி செய்யும் ஒன்றிய அரசு அமைந்தால் இன்னும் 10 மடங்கு திட்டங்களை திமுக அரசு செய்யும்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய அவர், “நாட்டு மக்களுக்கு ஒன்றுமே செய்யாத பிரதமர் தான். மோடியின் உத்தரவாதம் என்ற வகையில் பல்வேறு வடிவங்களில் விளம்பரங்களை செய்கின்றனர். 1 வாரத்தில் மோடி மீண்டும் தமிழகம் வருவதாக செய்திகள் உள்ளது. தமிழகத்திற்கு செய்துள்ள சிறப்பு திட்டங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்ற பட்டியலை மோடி போடுவாரா ? அதனை தமிழக மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
மோடி கொண்டு வரும் திட்டங்களை திமுக தடுப்பதாக கூறினார். அண்டபுளுகு ஆகாசபுளுகு என்பது போல இது மோடியின் புளுகு. என்ன திட்டங்களை அவர் கொண்டு வந்தார் அதை நாம் தடுக்க ? எந்த திட்டத்திற்கு தடையாக திமுக இருந்தது என மோடியால் சொல்ல முடியுமா ?
மதுரையில் 2014 ஆம் ஆண்டு எய்ம்ஸ் வரும் என மோடி அரசு அறிவித்தது. அப்போது ஜெயலலிதா முதல்வர். அவர் தடுத்தாரா என்றால் இல்லை. அதன் பிறகு மோடியின் நண்பர்களான ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அவர்கள் தடுத்தார்களா என்றால் அதுவும் இல்லை. 2021 ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அதை நாங்கள் தடுத்தோமா என்றால் அதுவும் இல்லை. ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகள் தமிழ்நாட்டை திரும்பி பார்க்காமல் . தேர்தலுக்கு முன்னதாக வந்தால் ஏமாற நாங்கள் என்ன ஏமாளிகளா ? பாஜக வின் பொய்களும் கட்டுக்கதைகளும் மக்களிடத்தில் எடுபடாது.
மாநிலத்தை கெடுத்த அதிமுக , மாநிலத்தை கண்டு கொள்ளாத பாஜக வின் கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு உள்ளார்கள். மக்களின் நலனே முக்கியம் என செயல்படும் நம் திராவிட மாடல் அரசிற்கு மக்கள் துணை நிற்பது போல , உண்மையான வளர்ச்சியை நமது நாடு காண ஒட்டுமொத்த இந்திய மக்களும் தயாராகிவிட்டார்கள் . பாசிசத்தை வீழ்த்த இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் , தமிழ்நாட்டை உயர்த்துவோம் , இந்தியாவை காப்போம்” என்று உரையாற்றினார் ஸ்டாலின்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை: உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ தகவல்!
Heatwave: சூரியனின் கரிசனம் ‘இந்த’ மாவட்டங்கள்ல ரொம்பவே அதிகம்!