ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தன்னை மறந்து நாலாந்தர பேச்சாளரைப் போல பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நல்ல பாடத்தை வழங்கியிருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காலை முதல் தொடர்ந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். இதனால் தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 2) செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வெற்றியை தேடி தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சியை இன்னும் சிறப்பாக நடத்திட வேண்டும் என்று மக்கள் மிகப்பெரிய ஆதரவை தந்துள்ளார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னையே மறந்து ஒரு நாலாந்தர பேச்சாளரைப் போல் பேசிய பேச்சுக்கு மக்கள் நல்ல பாடத்தை வழங்கியிருக்கிறார்கள். 20 மாத கால திமுக ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது இந்த வெற்றிக்காக தொடர்ந்து அயராது பாடுபட்ட அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இதை விட மிகப்பெரிய வெற்றியை தருவார்கள்.” என்றவரிடம் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் தேசிய அரசியலில் தான் இருக்கிறேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.” என்று தெரிவித்தார்.
செல்வம்
“தேர்தல் வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை”: இளங்கோவன்
பணநாயகம் வென்றுவிட்டது : அதிருப்தியில் கிளம்பிய அதிமுக வேட்பாளர்!