Stalin said BJP achievement is threat opposition parties

ஜனநாயக சக்திகளை மிரட்டுவதுதான் பாஜகவின் சாதனை : ஸ்பெய்னில் இருந்து ஸ்டாலின் மடல்!

அரசியல்

Stalin said BJP achievement is threat opposition parties

ஜனநாயக சக்திகளை மிரட்டுவதுதான் பாஜகவின் 10 ஆண்டுகால சாதனை என்று முதல்வர் ஸ்டாலினும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் 55ஆவது நினைவு நாள், நாளை (பிப்ரவரி 3)அனுசரிக்கப்படவுள்ளது. இந்நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 2) கட்சியினருக்கு மடல் எழுதியுள்ளார்.

ஸ்பெய்னில் இருந்தாலும் நினைவு எல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின்,

“பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளன்று அமைதிப் பேரணி நடத்தி, மலர் தூவி மரியாதை செலுத்துவது கழகத்தின் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான வழக்கமாக உள்ளது.

கலைஞர் தொடங்கி வைத்த அந்த நடைமுறை வெறும் சம்பிரதாயச் சடங்கல்ல. “எங்கள் அண்ணனே.. நீ தொடங்கிய இயக்கம் எந்த இலட்சியத்திற்காக உருவானதோ, அந்த இலக்கை அடையும் வகையில் எங்கள் வெற்றிப் பயணம் தொடர்கிறது” என்று மனதில் சூளுரை ஏற்று, அதற்கேற்ற வகையில் இயக்கத்தை வழிநடத்திடும் வலிமையைப் பெறுவதற்கான வாய்ப்பு.

கலைஞர், பேராசிரியர் முன்னிலையில் அண்ணா சதுக்கம் நோக்கி எத்தனையோ அமைதிப் பேரணிகளில் நடந்து சென்றது என் நினைவுக்கு வருகிறது. இந்த முறை, உங்களுடன் வருவதற்கான சூழல் அமையவில்லை. எனினும், எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று போற்றப்பட்ட அண்ணா நம்மோடுதான் இருப்பார்.

அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதல் முழக்கம். அதனை முன்னெடுத்து, அயராது உழைத்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “பாசிச பாஜக ஆட்சியின் சர்வாதிகார, ஜனநாயக விரோத போக்கிற்கு முடிவுகட்ட வேண்டிய உறுதியுடன் இருக்கிறோம்.

மக்கள் தாங்கள் விரும்பிய மொழியில் பேசுவதை, விரும்பிய தொழிலைச் செய்வதை, விரும்பிய உடையை உடுத்துவதை, விரும்பிய உணவை உண்பதை, விரும்பிய அரசைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வதற்கும், இவற்றுக்கு அடிப்படையான மாநில உரிமைகளை கட்டிக்காப்பதற்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, தேர்தல் களப் பணிகளை முன்கூட்டியே தொடங்கி மிகுந்த உற்சாகத்தோடு அதனை முன்னெடுத்துச் செல்கிறது திமுக.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த 19-ஆம் தேதி, கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு என மூன்று குழுக்கள் அறிவிக்கப்பட்டு அந்தக் குழுக்கள் தங்கள் பணிகளை உடனடியாகத் தொடங்கிவிட்டன.

ஜனவரி 21-ஆம் நாள் சேலத்தில் நடைபெற்ற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடும் மாநில உரிமை மீட்பு முழுக்கத்தை முன்வைத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.

Stalin said BJP achievement is threat opposition parties

தோழமைக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து நடத்துவதற்காக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் காங்கிரஸ் பேரியக்கத்துடன் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நிறைவு செய்து, மற்ற கட்சியினருடன் ஆலோசனையில் உள்ளனர். தோழமை உணர்வை மதித்தும், நாட்டின் நிலைமையை உணர்ந்தும் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவது குறித்த செய்திகள் எனக்கு எட்டியபடி உள்ளன.

அக்கவுண்ட்டில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றோ, ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றோ, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குவோம் என்றோ வாக்குறுதி அளித்துவிட்டு, எல்லாமே ஜும்லா என்று ஏமாற்றுகின்ற பா.ஜ.க போலவோ அதன் கள்ளக்கூட்டணியான அ.தி.முக. போல தி.மு.க.வின் நாடாளுமனறத் தேர்தல் வாக்குறுதிகள் இருக்காது என்பதால், கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று பலதரப்பு மக்களையும் அமைப்புகளையும் சந்தித்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற பொறுப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை நேரிலும், கடிதத்திலும், மின்னஞ்சலிலும், QR Code வாயிலாகவும் வழங்கி வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் கழகத்தின் முதன்மைச் செயலாளர்  அமைச்சர் கே.என்.நேரு  தலைமையிலான நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடங்கிய இந்தக் குழுவினர், அண்ணா அறிவாலயத்தில், நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்துத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

தினமும் 4 தொகுதிகள் வீதம் இதுவரை 22 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஒவ்வொன்றும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டமாக மட்டுமில்லாமல் கழகத்தினர் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளுக்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் கூட்டமாகவும் இருப்பது நிர்வாகிகளை மிகுந்த உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என்பதை அறிகிறேன்.

திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. முன்னெடுத்து நடத்திய “வெல்லும் சனநாயகம்” மாநாட்டில் நான் குறிப்பிட்டதுபோல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம்தான். அதிமுகவை வைத்து பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் கழக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி.

பா.ஜ.க.வுக்கு எதிரான வெற்றிக் கூட்டணி எப்படி அமையவேண்டும் என்பதை கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைத்த கூட்டணி வாயிலாக நிரூபித்துக் காட்டின திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சிகளும். அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி உறுதியாகக் களம் கண்டு, வெற்றி பெற்றதன் விளைவாக திராவிட மாடல் அரசு அமைந்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக ஆட்சியை வழங்கி வருகிறது.

இதுதானே அண்ணாவின் இலட்சியம். இதுதானே தலைவர் கலைஞரின் செயல்திட்டம்.
மக்களிடம் செல் என்றார் பேரறிஞர் அண்ணா. உங்களில் ஒருவனான நான் அதை வழிமொழிவதுடன், ‘மக்களிடம் செல். மக்களிடம் சொல்’ என்று ஒவ்வொரு உடன்பிறப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.

Stalin said BJP achievement is threat opposition parties

இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு குடும்பமும் கழக ஆட்சியின் சாதனைகளால் பெற்றிருக்கும் பயன்களை உணர்த்துங்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவுபடுத்துங்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் கூடுதலான உழைப்பை வழங்கி, கூடுதலான வாக்கு வித்தியாசத்தில், கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை உறுதி செய்யுங்கள்.

அந்த இலக்கை திமுக நிச்சயம் அடைந்துவிடும் என்கிற நம்பிக்கை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடனான சந்திப்பின்போது நிர்வாகிகள் காட்டும் உற்சாகத்திலேயே நன்கு புலப்படுகிறது. அந்த உற்சாகம், தேர்தல் களப்பணிகளிலும் குன்றாமல் குறையாமல் வெளிப்பட வேண்டும்.

நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் சளைத்தவையல்ல. பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒன்றே ஒன்றிய பா.ஜ.க அரசின் பத்தாண்டுகால சாதனையாக இருப்பதால் தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரபரப்புக்கான செயல்பாடுகள் இருக்கும். எதற்கும் அஞ்சாத இயக்கம்தான் தி.மு.க என்பதைக் களத்தில் ஆற்றும் பணிகள் மூலமாக அவர்களுக்குப் புரிய வைப்போம்.

நாடாளுமன்றத்தில் இடைக்காலப் பட்ஜெட்டை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்திருக்கிறது. அதிலும்கூட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளது. முழுமையான பட்ஜெட்டை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும். மாநிலங்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதற்கேற்ற வகையில் வெற்றி பெறுவோம் என அண்ணா நினைவு நாளில் சூளுரைப்போம்.

அமைதிப் பேரணியில்  உடன்பிறப்புகள் அலைஅலையாய் வங்கக்கடல் நோக்கிச் செல்கின்ற நேரத்தில், இங்கே அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி உங்களில் ஒருவனான நானும் சூளுரை ஏற்கிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்க ஒன்றிய அரசை அகற்றியே தீருவோம்.” என்று கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மேகதாது வாக்கெடுப்பில் தமிழக அதிகாரிகள் கலந்துகொண்டது ஏன்? : எடப்பாடி

”வா தலைவா” விஜயை வாழ்த்தும் திரை பிரபலங்கள்!

Stalin said BJP achievement is threat opposition parties

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *