தமிழக முதல்வரை விமர்சித்த வழக்கில் பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி இன்று கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதை, பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி கடந்த நவம்பர் 1ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்காக பலமுறை நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர், ஆஜராகவில்லை.
அதேநேரத்தில், விசாரணைக்கு ஆஜராகாத கிஷோர் கே.சாமி, முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக கடந்த நவம்பர் 18ஆம் தேதி, விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி கிஷோரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக நம் மின்னம்பலத்தில், ’முதல்வர் குறித்து விமர்சனம்: கிஷோர் கே.சாமி முன்ஜாமீன் மனு தள்ளுபடி’ என்ற தலைப்பில், கடந்த நவம்பர் 18ஆம் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று அதிகாலையில் கிஷோர் கே.சாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
பயணிகள் வாக்குவாதம்: நள்ளிரவில் நிறுத்தப்பட்ட ரயில்!
பட்ஜெட்: பல்துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் ஆலோசனை!