பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைப் பரிசளித்தார்.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று (நவம்பர் 11) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். இவ்விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக இவ்விழாவில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திலிருந்து திண்டுக்கல் அம்பாத்துரைக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
முக்கியமாக, திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை பொன்னாடை அணிவித்து வரவேற்றார், ஸ்டாலின். அப்போது, ’பொன்னியின் செல்வன்’ தமிழ் நாவலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பதிப்பினையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கி மகிழ்வித்தார்.
தேசிய அளவிலான தலைவர்களை சந்திக்கும்போது எல்லாம் அவர்களுக்கு தன் பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின், குறிப்பிடத்தகுந்த நூல்களை வழங்கி வருகிறார்.
கடந்த நவம்பர் 2ஆம் தேதி சென்னையில் மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்குக்கூட, Rule of the Commoner (சாமானியரின் ஆட்சி) என்ற புத்தகத்தைப் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் பொன்னியின் செல்வன் தமிழ் நாவலின் ஆங்கில பதிப்பு நூலை வழங்கியிருக்கிறார். இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் 1 கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றதுடன், வசூலையும் வாரிக் குவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் பட விளம்பரத்துக்குப் பிறகு, பல புத்தக நிறுவனங்களிலும் அந்நாவல்களும் அதிக விற்பனையாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
இதுதான் எங்கள் கொள்கை: பிரதமர் மோடி