டிஜிட்டல் திண்ணை: ஒரு கையில் டாப் லிஸ்ட்… ஒரு கையில் ஹிட் லிஸ்ட்.. அமைச்சரவை மாற்றத்துக்கு தயாராகும் ஸ்டாலின்

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாள் சம்பவங்கள் பற்றிய  தகவல்கள்  இன்பாக்ஸில் வந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு  வாட்ஸ் அப்  தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஏப்ரல் 21ஆம் தேதியோடு நிறைவு பெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தத்தமது தொகுதிகளுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஓரிரு தினங்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி திமுகவில் அதிர்வை ஏற்படுத்திய பி. டி.ஆர் குரலாக உலாவரும் ஆடியோ விவகாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையேயும் விவாதப் பொருளாக மாறி உள்ளது.

இந்த நிலையில் ஒரு படி மேலே சென்று பிடிஆருக்கு பதிலாக புதிய நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு என்று பரவிய தகவல்களும் திமுகவில் அதிர்வை ஏற்படுத்தின.

2021 மே மாதம் முதலமைச்சர் பதவியேற்ற ஸ்டாலின் இப்போது வரை பெரிய அளவில் அமைச்சரவை மாற்றம் செய்யவில்லை. இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்த சூழலில் கேபினட்டில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் இருக்கலாம் என்பதுதான் திமுக உயர்வட்டாரங்களில்  உலாவரும்  தகவல்.

அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர் கூட்டத்திலும்,  சட்டமன்றத்திலும்,  ஏற்கனவே நடந்த பொதுக்குழுவிலும் கூட சொல்லியிருக்கிறார்.

இதன்படியே ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை உளவுத்துறை மூலம் ஆய்வு நடத்தி ஒரு பட்டியலை தயாரித்திருக்கிறார் ஸ்டாலின். இதே நேரம் முதலமைச்சருடைய மாப்பிள்ளை சபரீசனின் பெனின்சுலா நிறுவனம் சார்பில் தனியாக அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டு அந்த பட்டியலும் முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு பட்டியலையும் வைத்துக்கொண்டு ஒரு இறுதிப் பட்டியலை தயாரித்திருக்கிறார் முதலமைச்சர். இதில் சிறப்பாக செயல்படும் அமைச்சர்கள் பட்டியலும் சரியாக செயல்படாத அமைச்சர்கள் பட்டியலும் அடங்கும்.

சிறப்பாக செயல்படும் அமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இரண்டாம் இடத்தில் தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மூன்றாம் இடத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். 

அதே நேரம் சரியாக செயல்படாத அமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர் பாசன துறை அமைச்சருமான துரைமுருகன் பெயர் இருப்பதாக சொல்கிறார்கள்.  ஹிட் லிஸ்டில் இரண்டாம் இடத்தில் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பெயர் இடம் பெற்று இருப்பதாகவும் தகவல்.

இந்த அமைச்சரவையிலேயே மூத்த அமைச்சர் துரைமுருகன் தான். தவிர சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்தவர் ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமி.

இப்படிப்பட்ட அமைச்சர்களின் பெயர்கள் சரியாக செயல்படாத  பட்டியலில் இடம் பெற்று இருப்பதாக லீக் ஆன தகவல்கள் அமைச்சர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

இப்போது அமைச்சர்களாக இல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு அமைச்சர் யோகம் அடிக்குமா என்ற எதிர்பார்ப்புடனும்… இப்போது அமைச்சராக இருப்பவர்கள் தங்கள் துறை மாறுமா அல்லது பதவியே போகுமா என்ற படபடப்புடனும் சட்டமன்றம் நிறைவு பெற்று சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் இந்த முறையாவது உறுதியா நடவடிக்கை வரை செல்வாரா…அல்லது எச்சரிக்கையோடு நிறுத்திக் கொள்வாரா என்ற பட்டிமன்றமும் திமுக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் நடக்கிறது” என்று மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.

அனிதா தான் அமைச்சர், ஆனால்…

ஆருத்ரா மோசடி: ஆர்.கே.சுரேஷ் வழக்கை நிராகரித்த நீதிபதி!

ட்ரெண்டாகும் டைட்டானிக் கப்பலின் மெனு கார்ட்!

Stalin preparing for Cabinet reshuffle
+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0