எ.வ.வேலு முதல் தங்கம் தென்னரசு வரை : அமைச்சர்களை பாராட்டிய ஸ்டாலின்

Published On:

| By Kavi

குமரியில் கடலுக்கு நடுவே திருவள்ளுவர் சிலை திறந்து 25ஆண்டுகள் ஆகும் நிலையில், தமிழக அரசு வெள்ளி விழாவை கொண்டாடி வருகிறது.

இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் நேற்று (டிச்மபர் 30) திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தை திறந்து வைத்தார்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 31) கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு, திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார்.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியீட்டு, திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கின்ற பொத்தானை அழுத்தியபோது, தன்னுடைய உடல் நடுங்கியதாக தலைவர் கலைஞர் சொன்னார். ஏனென்றால், அந்தளவுக்கு உணர்ச்சிப் பெருக்கத்தில் அவர் இருந்தார். வான்புகழ் வள்ளுவருக்கு வானுயரச் சிலை அமைக்கவேண்டும் என்பது, அவருடைய நெடுங்கனவு!

கலைஞர் என்ன செய்தார்?

அந்தக் கனவு நனவான மகிழ்ச்சி, அவருக்கு அந்த உணர்வை தந்தது! இன்றைக்கு இந்தச் சிலையின் வெள்ளி விழாவை நடத்தும்போது, எனக்குள் இருக்கின்ற பெருமை இன்றைக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது! எவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு, நமக்கு இப்படி ஒரு வரலாற்று வாய்ப்பைத் தலைவர் கலைஞர் உருவாக்கித் தந்துவிட்டுப் போயிருக்கிறார் என்ற எண்ணம்தான், இந்தப் பெருமைக்குக் காரணம்!
பொதுவாக, குடும்பங்களில் சாதாரணமாக கேட்பார்கள்…

“உன் அப்பா என்ன வைத்துவிட்டு போனார்?” என்று கேட்பார்கள். என்னை கேட்டால், தமிழ்நாடு தொடங்குகின்ற இந்த குமரிமுனையில் வள்ளுவர் சிலையில் தொடங்கி, தலைவர் கலைஞர் செய்த சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
இதையெல்லாம் தனிப்பட்ட ஸ்டாலினுக்காக செய்தாரா? இல்லை! அப்போது யாருக்காக செய்தார்? தமிழ்நாட்டுக்கும் – தமிழுக்கும் – தமிழினத்துக்கும் உருவாக்கிக் கொடுத்த சொத்துகள்தான் இதெல்லாம்! என்னைப் பொறுத்தவரையில், அவர் வழியில் இந்த நாட்டுக்கும் – நாட்டு மக்களுக்கும் – தமிழுக்கும் உழைப்பதுதான் என்னுடைய வாழ்நாள் கடமை” என்று பெருமிதம் தெரிவித்தார்.

அமைச்சர்களுக்கு பாராட்டு

தொடர்ந்து பேசிய அவர், “திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சொன்னவுடன், அதற்கு பெரிய விழா நடத்தவேண்டும் என்று நான் சொன்னேன்… உடனே சில அதிமேதாவிகள், ஒரு சிலை அமைப்பதற்கு எதற்கு விழா நடத்தவேண்டும் என்று கேட்க தொடங்கினார்கள். அவர்கள் கேள்வியில் அர்த்தம் கிடையாது; ஆனால் உள்ளர்த்தம் உண்டு! அவர்களுக்கு ‘பதிலுக்குப் பதில்’ சொல்ல தேவையில்லை! ஆனால், உங்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, திருவள்ளுவர், தமிழர்களுக்கு இருக்கக்கூடிய உலக அடையாளம்! திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்! அதனால் கொண்டாடுகிறோம்! கொண்டாடுவோம்! கொண்டாடிக் கொண்டே இருப்போம்!

நேற்று அய்யன் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கக்கூடிய 37 கோடி ரூபாய் மதிப்பிலான கண்ணாடி இழை பாலத்தைத் திறந்து வைத்தேன். இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த எதிலும் வல்லவர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு , என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், நானூறு பக்கங்களில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலர இலக்கிய வரலாற்று கருவூலமாக உருவாக்கித் தந்திருக்கக்கூடிய செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், 12 கோடி ரூபாய் செலவில் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலகப் பொதுமறையான திருக்குறளை பறைசாற்றும் வகையில், 3டி சீரொளிக்காட்சி அமைத்திருக்கும் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில், இந்த விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து, அதில் வெற்றி கண்டிருக்கக்கூடிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

தமிழ்நெறியின் அடையாளமாக, சுனாமியையும் எதிர்த்து உயர்ந்து நிற்கின்ற இந்த வள்ளுவர் சிலைதான், நம்முடைய அடையாளத்தின் பண்பாட்டுக் குறியீடு! திருக்குறளையும், திருவள்ளுவரையும் சொல்லிலும், செயலிலும், நெஞ்சிலும் தூக்கிச் சுமந்த இயக்கம் திராவிட இயக்கம்!

தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடியே, சட்டமன்றத்தில் வாதாடி வள்ளுவர் படம் திறக்க வைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர்! போக்குவரத்துத் துறை அமைச்சரானதும், அனைத்து பேருந்துகளையும் திருக்குறளை எழுதினார்! பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, அனைத்து அரசு விடுதிகளிலும், திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெற வைத்தார்! காவலர் பதக்கத்தில் வள்ளுவரைப் பொறித்தார். தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் ஆண்டை அரசின் சார்பில் ஏற்றுக்கொண்டு அறிவித்தார்.

மயிலாப்பூரில், திருவள்ளுவர் நினைவாலயம் அமைத்தார். சென்னையில் வள்ளுவருக்கு கோட்டம் அமைத்தார். குறளோவியம் தீட்டினார். திருக்குறளுக்கு உரை எழுதினார். இப்படி திருக்குறளுக்காகவே வாழ்ந்தார்!

இந்தச் சிலையும் சாதாரணமாக அமைக்கப்படவில்லை. இதற்கென்று ஒரு வரலாறு இருக்கிறது… வான்புகழ் வள்ளுவருக்கு வானுயரச் சிலை அமைக்கவேண்டும் என்று 31.12.1975 அன்று அமைச்சரவையில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
1990-ஆம் ஆண்டு சிலைக்கான பணிகளை தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டது! 1997-ஆம் ஆண்டுதான் துரிதமாக பணிகள் நடைபெறத் தொடங்கி இந்தச் சிலை அமைக்கப்பட்டது!

கலைஞருடைய கனவுக்கு உரு கொடுத்த மாமனிதர்தான், கணபதி ஸ்தபதி ! அவர்தான் வள்ளுவர் கோட்டத்தையும், பூம்புகார் கோட்டத்தையும், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையையும் அமைத்தார். அவருடைய அப்பாதான், சென்னையில் இருக்கின்ற காந்தி மண்டபத்தை அமைத்தவர்.

இந்த கம்பீர வள்ளுவர் சிலைக்கு கலைஞர் காரணகர்த்தா என்றால், சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதி கலைக்கர்த்தா!. 7000 டன் எடை கொண்ட இந்தச் சிலையில், 3,681 கற்கள் இருக்கிறது. இத்தனைக் கற்களைக் கொண்டு ஒரு சிலையை உருவாக்கலாம். ஆனால், அதை ஒரு பாறையில் தூக்கி நிறுத்தி வைத்திருப்பது தான் இந்தச் சிலையின் பெருமை!

133 அடிக்கு சிலை வைக்க, 180 அடிக்கு சாரம் கட்டி இதை அமைத்தார்கள். 500 சிற்பிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கணபதி ஸ்தபதி சொன்னார்… தஞ்சைப் பேரரசன் ராஜராஜ சோழனிடம் அன்று கண்ட சிற்பக் கலை மரபை இன்று, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரிடத்தில் காண்கிறேன் என்று சொன்னார்.

தஞ்சை பெரிய கோயில் வடிவமைத்த குஞ்சரமல்லனின் வம்சத்தைச் சேர்ந்தவர்தான் கணபதி ஸ்தபதி . சொற்சிற்பியாம் கலைஞரும் – கல்சிற்பியாம் கணபதி ஸ்தபதியும் சேர்ந்து உலக வாழ்க்கைச் சிற்பியாம் வள்ளுவருக்காக உருவாக்கிய சிலைக்கு, நாம் வெள்ளிவிழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

யார் அந்த சார்? அமைச்சர்கள் யாரையோ காப்பாற்றுகிறார்கள் : எடப்பாடி குற்றச்சாட்டு!

தஞ்சையில் உள்ள தெரு நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டை: எதற்காக?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share