தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (டிசம்பர் 9) காலை கூடியது. அப்போது டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்கள் அழுத்தம் கொடுக்கவில்லை. சட்டம் இயற்றப்பட்ட பிறகு தீர்மானம் கொண்டு வந்து என்ன பயன்?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “டங்ஸ்டன் சுரங்கம் வரும் சூழ்நிலை வந்தால் நான் முதல்வராக இருக்கமாட்டேன்” என்று கூறினார்.
இந்தநிலையில், 2023 ஆகஸ்ட் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்து மாநிலங்களவை அதிமுக எம்.பி தம்பிதுரை பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, எதிர்க்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில், அதிமுக இந்த மசோதாவை ஆதரிக்கிறது என்று தம்பிதுரை கூறுவது அதில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி, அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.
சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்…
தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
செல்லநாய் படத்தை போட்டு, அந்த லவ் மாதிரி வருமா? சமந்தா தாக்கியது யாரை?