வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், சென்னைக்கு 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 26) தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை. விழுப்புரம். நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின்போது முதல்வர் ஸ்டாலின் அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களான மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, “அதிக மழைபொழிவினை பெற்றுவரும் நாகப்பட்டினம் மாவட்டத்தில், 125 JCB இயந்திரங்கள், 75 படகுகள். 250 ஜெனரேட்டர்கள். 281 மர அறுப்பான்கள்,
கடலூர் மாவட்டத்தில் 242 JCB இயந்திரங்கள். 51 படகுகள், 28 ஜெனரேட்டர்கள், 104 மர அறுப்பான்கள். 58 மோட்டார் பம்புகள்:
மயிலாடுதுறை மாவட்டத்தில், 85 JCB இயந்திரங்கள், 70 படகுகள், 164 ஜெனரேட்டர்கள். 57 மர அறுப்பான்கள். 34 மோட்டார் பம்புகள்:
திருவாரூர் மாவட்டத்தில் 125 JCB இயந்திரங்கள், 18 படகுகள். 142 ஜெனரேட்டர்கள், 73 மர அறுப்பான்கள். 18 மோட்டார் பம்புகள்..
தஞ்சாவூர் மாவட்டத்தில் 59 JCB இயந்திரங்கள். 29 படகுகள். 69 ஜெனரேட்டர்கள். 711 மர அறுப்பான்கள். 42 மோட்டார் பம்புகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவும், மாநில பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளது.
பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் பல்துறை அலுவலர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன” என்று மாவட்ட ஆட்சியர்கள் கூறினர்.
இதைதொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், நிவாரண முகாம்களை அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும். கனமழையின் போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவேண்டும் என்றும், வெள்ளநீர் தேங்கி பயிர்கள் சேதமடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும். மின்சார வசதி தடையின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ரத்து!
13 வயது சூர்யவன்சி ஐ.பி.எல்லில் ஆட முடியுமா… ஐ.சி.சி. ரூல்ஸ் சொல்வதென்ன?