தூத்துக்குடி தொகுதியோடு சேர்த்து நெல்லை தொகுதித் தேர்தல் பணிகளையும் கவனித்துக் கொள்ளுமாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் நெல்லை உட்பட காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
நீண்ட இழுபறிக்கு பின்னர் மார்ச் 25ஆம் தேதி நெல்லை காங்கிரஸ் வேட்பாளராக கன்னியாகுமரியைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார். சொல்லப்போனால், முதல்வர் நாங்குநேரியில் பிரச்சாரத்துக்கு செல்வதற்கு சற்று நேரத்துக்கு முன்னர்தான் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் 25ஆம் தேதி பிரச்சாரத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்த பின்னர் நெல்லை மாவட்ட செயலாளர்களையும், பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசுவையும் தனிப்பட்ட முறையில் சந்தித்தார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்.
அப்போது, ‘நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் நமது கட்சி நிர்வாகிகள் சிலரே தொடர்பில் இருப்பதாக எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கிறது. உடனடியாக அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுங்கள். சாதி ரீதியாகவோ, வேறு ஆதாயத்துக்காகவோ நயினாருடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் யார் என்றும் என்னிடம் ரிப்போர்ட் இருக்கிறது. அவர்கள் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை, எதிர்க்கட்சிகள் குறிவைக்கின்றனர். அதற்கு இடமளிக்க கூடாது 40க்கு 40 மார்க் வாங்க வேண்டும்’ என்று எச்சரித்து சென்றிருக்கிறார் ஸ்டாலின்.
இதுதொடர்பாக மின்னம்பலத்தில் கடந்த 25ஆம் தேதி வெளியான நயினாருடன் கள்ளத் தொடர்பில் திமுக நிர்வாகிகள்- ஸ்டாலின் எச்சரிக்கை! என்ற தலைப்பில் வெளியிட்ட டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு ராபர்ட் புரூஸ் திமுகவின் முக்கிய புள்ளிகளை சந்தித்து வந்தார். அந்தவகையில், ஓரிரு நாட்களுக்கு முன் சபாநாயகர் அப்பாவுவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். காலை 9.30 மணிக்கு ராபர்ட் புரூஸை வரச் சொல்லி அப்பாவு தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி நேரத்துக்கு வந்து அப்பாவு வீட்டில் ராபர்ட் புரூஸ் காத்திருந்தார். நேரம் 10, 10.15 மணி ஆகியும் அப்பாவு வெளியே வரவில்லை.
காலை 10.30 மணிக்கு பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு வேட்பாளாரை வரச் சொல்லியிருந்தார். இதனால் அப்பாவு வீட்டில் காத்திருந்த ராபர்ட் புருஸ், அங்கிருந்து கிளம்பி தங்கம் தென்னரசுவை பார்க்க சென்றுவிட்டார்.
இந்நிலையில் திமுககாரர்கள் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என நெல்லை பகுதி பிஷப்புகள் முதல்வர் கவனத்துக்கும், காங்கிரஸ் முக்கியத் தலைவரான சோனியா காந்தி கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இந்நிலையில்,26ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் முதல்வர். கூட்டம் முடிந்த பின்னர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசியிருக்கிறார்.
”நெல்லையில் காங்கிரஸாருக்கு திமுகவினர் ஒத்துழைப்பதில்லை என்று எனது கவனத்துக்கு வந்துள்ளது. எனவே நீங்கள் தூத்துக்குடியோடு சேர்த்து நெல்லையையும் கவனித்து கொள்ளுங்கள். தங்கம் தென்னரசுவோடு இணைந்து வேலை செய்யுங்கள். 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்” என்று ஸ்டாலின் சொல்ல, அதன்படியே செய்வதாக முதல்வரிடம் உறுதியளித்துள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன்.
நெல்லையையும் கவனித்துக்கொள்ள ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், முதல்வர் சொன்ன அடுத்த நாள் முதலே நெல்லை தேர்தல் பணியையும் அனிதா ராதாகிருஷ்ணன் பார்த்து வருகிறார்.
நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஆலோசனை செய்தார். தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸ் வீட்டுக்கு சென்றார். ராதாபுரம் பகுதி பெரியதாழை, கூடுதாழை, குட்டம், கூட்டப்பனை, இடிந்தகரை பகுதிகளில் இன்று (மார்ச் 30) தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
வேந்தன்
’போற போக்கில் உதவி செய்தவர்’ : டேனியல் பாலாஜி குறித்து பெண் இயக்குநர் உருக்கம்!
வடசென்னைக்கு என்னென்ன செய்தேன்? : பட்டியல் போடும் கலாநிதி வீராசாமி