நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நியமன பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்று தகவல் கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதை ஒட்டி திமுகவினரிடையேயும் எதிர்பார்ப்புகளும் விவாதங்களும் அதிகரித்துள்ளன. Stalin Order Municipal Department
கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் உள்ளிட்ட 2,566 பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது.
அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கான போட்டித் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக கடந்த ஆண்டு ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
அந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர், நவம்பர் மாதங்களிலும், நீதிமன்ற வழக்குகள் காரணமாக துப்புரவு ஆய்வாளர் பணிக்கு மட்டும் கடந்த ஜனவரி மாதத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல்கள் நடத்தப்பட்டன.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நேர்காணலில் பங்கேற்கத் தவறியவர்களுக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு நேர்காணலுக்கு அழைத்துக் கொண்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததுமே, துறை சார்ந்த ஆள்தேர்வுகளை அந்தந்த துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்ததுடன், அனைத்து ஆள்தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவே நடத்தும் வகையில் சட்டத் திருத்தமும் செய்யப்பட்டது.
ஆனால், அதற்கு முற்றிலும் எதிரான வகையில், நகராட்சி நிர்வாகத்துறைக்கு மட்டும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக ஆள்தேர்வு நடத்துவது ஏன்? டி.என்.பி.எஸ்.சி மீது அரசுக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது அண்ணா பல்கலைக்கழகம் தான் மிக மிக நேர்மையான அமைப்பா?
நகராட்சி நிர்வாகத்துறைக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியான நாள் முதலாகவே, ஆள்தேர்வு முறையின் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்த ஐயம் நிலவிக் கொண்டு தான் இருக்கிறது” என அன்புமணி கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, ”திமுக ஆட்சிக்கு வந்ததும் நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பிடிஆர், அரசின் அனைத்து பணி நியமனங்களும் டி.என்.பிஎஸ்.சி. மூலமாகவே நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு கே.என்.நேரு உள்ளிட்ட சில அமைச்சர்கள் அப்போதே முதல்வரிடம் மாற்றுக் கருத்து தெரிவித்தனர். எல்லா பணியிடங்களையும் டி.என்.பி.எஸ்.சி. மூலமாகவே செய்தால் கட்சிகாரங்களுக்கு நம்மால் எந்த உதவியும் செய்ய முடியாமல் போய்விடும், ஆட்சிக்கு வந்தும் கட்சியினரின் குடும்பங்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுவிடும் என்று அவர்கள் சொன்னார்கள். ஆனபோதும் பி.டி.ஆர். இதில் உறுதியாக இருந்தார். ஆனால், கே.என்.நேரு முயன்று இதில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு விலக்கு பெற்றார்.
இந்த பின்னணியில்தான், நகராட்சி நிர்வாகத் துறை பணியிட நியமனங்களுக்கு அண்ணா பல்கலை மூலம் தேர்வு நடத்தப்பட்டது. சில திமுக நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டியவர்கள், கட்சிக்கார்களை ’சிபாரிசு’ செய்திருந்தனர்.

அன்புமணி அறிக்கை வெளியான நிலையில், அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரித்திருக்கிறார் முதல்வர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க தகுதி அடிப்படையிலேயே நியமனம் செய்யவேண்டுமென உத்தரவிட்டிருக்கிறார். நியமன அறிவிப்பு வந்த பிறகு அது தொடர்பாக சட்ட சிக்கலோ, அரசியல் சிக்கலோ ஏற்பட்டுவிடக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லியிருக்கிறார் முதல்வர்.
இந்தநிலையில்தான்… நகராட்சி நிர்வாகத் துறையில் காலியான பணியிடங்களை நிரப்புவதற்கான நியமன பட்டியல் இன்றோ நாளையோ வெளியாக இருக்கிறது” என்கிறார்கள். Stalin Order Municipal Department