நாளை(ஆகஸ்ட் 20) தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.
இந்த உண்ணாவிரதத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைக்கிறார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. அவர் வழிகாட்டுதலின் படி இந்த உண்ணாவிரதம் நடைபெறும் என்று திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி அறிவித்தார்.
இதுதவிர யார் யார் எங்கெங்கு தலைமை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று திமுக வெளியிட்ட பட்டியலில் கூட மு.க.ஸ்டாலின் பெயர் இடம் பெறவில்லை.
ஸ்டாலின் ஏன் பங்கேற்கவில்லை?
“2007ல் திமுக ஆளும் கட்சியாக இருந்தது. கலைஞர் முதல்வராக இருந்தார். மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது. அப்போது சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் கலைஞர் பந்த் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, ஒரு அரசாங்கமே பந்த் நடத்த கூடாது. இதற்கு சில தீர்ப்புகள் முன்னுதாரணமாக இருக்கின்றன என்பதை வலியுறுத்தி கலைஞர் அறிவித்த பந்த்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது’ என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அக்டோபர் 1ஆம் தேதி திங்களன்று அழைப்பு விடுத்த பந்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விடுமுறை தினமான செப்டம்பர் 30ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது உச்ச நீதிமன்றம். பந்த் நடத்தக் கூடாது என்று திமுகவுக்கும் மாநில அரசுக்கும் எச்சரிக்கை விடுத்தது. திமுக அறிவித்த பந்த் சட்டவிரோதமானது என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.
இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் கலைஞர் ஆலோசனை செய்தார். அப்போது பந்த்தை உண்ணாவிரத போராட்டமாக மாற்றி அறிவித்தார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
அதன்படி சென்னையில் நடந்த உண்ணாவிரத்தில் கலந்துகொண்ட முதல்வர் கலைஞர் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி தலைமைச் செயலகம் சென்றுவிட்டார்.
இதையும் விடாத ஜெயலலிதா, கலைஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பின்னாளில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில்தான் முதல்வர் ஸ்டாலின் நீட் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இது அணிகள் நடத்தக்கூடிய போராட்டம் என்ற அடிப்படையில் கலந்துகொள்ளவில்லை” என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
அதன்படி உண்ணாவிரத போராட்டத்தில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற பட்டியலில் கூட முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை.
அதுபோன்று துரைமுருகன், நேரு உள்ளிட்ட அமைச்சர்களின் பெயருக்கு முன்னால் கூட அமைச்சர் என்று குறிப்பிடப்படவில்லை. அவர்களின் கட்சி பதவிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
அதேசமயம், கலைஞர் அன்று உண்ணாவிரத போராட்டத்துக்கு வந்து சென்றது போல ஸ்டாலினும் வந்து ஆதரவு தெரிவிப்பாரோ என்ற எதிர்பார்ப்பும் திமுகவினரிடையே எழுந்துள்ளது.
வேந்தன், பிரியா
மீம்ஸ் புகழ் சீம்ஸ் நாய் மறைந்தது!
51 வயது யோகி காலில் விழுந்த 72 வயது ரஜினி