தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நவம்பர் 5,6 தேதிகளில் கோவை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக நவம்பர் 6ஆம் தேதி மாலை கோவையில் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் என்ன நடந்தது என்று நமது மின்னம்பலத்தில் come back செந்தில்பாலாஜி… calm back நிர்வாகிகள்- கள ஆய்வில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை ஸ்டாலின் புகழ்ந்து பேசியது, நிர்வாகிகளின் மினிட்ஸ் புத்தகங்களை ஆய்வு செய்தது, நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது என கலந்தாய்வு கூட்டத்தில் நடந்தவற்றை குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கோவை கள ஆய்வு தொடர்பாக இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில் இந்த கலந்தாய்வு கூட்டம் பற்றி ஸ்டாலின், “திமுகவின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை முன்கூட்டியே கோவைக்குச் சென்று கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்ததுடன், நிர்வாகிகள் அனைவரையும் மினிட்ஸ் புத்தகங்களையும் எடுத்துவரச் செய்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றியவர் கோவை மாவட்டத்தை திமுகவின் இரும்புக் கோட்டையாக வைத்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி. கோவை மாவட்டத்தின் இரண்டு நாள் நிகழ்வுகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னின்று ஏற்பாடு செய்திருந்த விதம், எடுத்துக்கொண்ட அக்கறை, செயலாற்றலில் வெளிப்பட்ட துல்லியம் இவை அனைத்தும் நமக்கு எந்தளவு மகிழ்ச்சி தருகிறதோ, அதே அளவுக்கு அரசியல் எதிரிகளுக்கு அதிர்ச்சியையும் தருகிறது.
அதனால்தான் அவரை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் எனச் சதிவலை விரித்தனர். சட்டப்போராட்டத்தில் வென்று, சிறை மீண்ட சிங்கமெனக் களம் கண்டு, கழகத்தினர் வியந்திட – களத்தில் எதிர் நிற்போர் வியர்த்திடச் செயல் புயலாகத் தன் பணியினைச் சிறப்பாகச் செய்திருந்தார், தனக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடைகளை உடைத்து ‘கம்பேக்’ கொடுத்திருக்கும் செந்தில் பாலாஜி.
நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கோரிக்கைகள், களநிலவரங்கள் குறித்த விவரங்கள் பெறப்பட்டதுடன், அவரவர் பகுதியில் ஆற்றிய செயல்பாடுகளை மினிட்ஸ் புத்தகங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடத்தி, கட்சியினரை அன்புடன் ஒருங்கிணைத்து, மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் உறுதுணையாக நிற்கும்போது அங்கே கட்சியும் வலிமையாக இருக்கிறது, களத்தில் வெற்றியும் உறுதியாக அமைகிறது.
இதற்குச் சாட்சியமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வடக்கு நகரக் கழகச் செயலாளர் முகமது யூனுஸ் என்னிடம் வழங்கிய மினிட்ஸ் புத்தகம் இருந்தது. 46 நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருப்பதைப் பதிவு செய்திருந்தார்.
அந்த ஒன்றியத்தில் தி.மு.க தொடர்ச்சியாக எல்லாத் தேர்தல்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல, சூலூர் பேரூர் கழகச் செயலாளார் கௌதமன் 57 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.
அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து, மாவட்ட – ஒன்றிய மற்றுமுள்ள அமைப்புகள் குறிப்பிட்ட கால அளவில் அமைப்புக் கூட்டம், செயற்குழுக் கூட்டம், பொதுஉறுப்பினர்கள் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களை நடத்தவேண்டும் என்பதை ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழக நிர்வாகிகளிடம் வலியுறுத்தி, களப்பணிகளை முடுக்கிவிட்டேன்.
கலந்துரையாடல் போல அமைந்த இந்த கலந்தாய்வுக் கூட்டம் நிர்வாகிகளுக்கு உற்சாகத்தைத் தந்த நிலையில், என்னுடன் ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தனர். என்னுடைய விருப்பமும் அதுதான். அதனால், ஒவ்வொருவருடனும் படம் எடுத்துக் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தினேன்.
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் புது உத்வேகம் உருவாகியிருப்பதை உணர முடிந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.கக கூட்டணி வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்திருப்பதாகவே கருதுகிறேன். மக்கள் பணியை இலட்சியமாகக் கொண்டிருப்பதால் மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
விஜய்யுடன் கூட்டணியா? – ராமதாஸ் விளக்கம்!
கோவையை தொடர்ந்து விருதுநகரில் ஸ்டாலின் கள ஆய்வு!