ஓ.பன்னீர்செல்வத்தை பி டீமாக வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவை பிளக்கப் பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி தொடர்பான பிரச்சினையில் நேற்று(அக்டோபர் 18) எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
அவர்கள் சட்டமன்றத்தில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி தரவில்லை.
தடையை மீறி வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை துணைச் செயலாளராகவும் 62 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்தில் அவர்களுக்கு இருக்கை அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.
சட்டமன்றத் தலைவர் அதை 2 மாதம் கிடப்பில் வைத்திருந்தார். மீண்டும் 2 முறை நினைவூட்டல் கடிதமும் அளிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்பு நகலையும், சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நகலையும் அனுப்பினோம்.
அனைத்து ஆதாரங்களையும் முழுமையாக அளித்தும் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. நேற்று(அக்டோபர் 18) மீண்டும் ஒருமுறை சபாநாயகரை நேரில் சந்தித்து முழுமையான விளக்கத்தை அளித்தோம்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வமே எதிர்க்கட்சித் துணைத்தலைவராக தொடருவார் என்று கூறி அநீதி இழைத்திருக்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். நடுநிலையோடு சபாநாயகர் செயல்படவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைப்படி தான் சபாநாயகர் நடந்து கொள்கிறார். சட்டமன்றத் தலைவர் மூலம் ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு தீர்மானத்தின்படி ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அதிமுகவை அழிக்கவேண்டும், ஒடுக்கவேண்டும், சிதைக்கவேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது.
எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்படுகிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது” என்று ஆவேசமாகப் பேசினார்.
கலை.ரா
அனுமதி மறுப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட ஈபிஎஸ் கைது!
காங்கிரஸ் தலைவர்: இன்று வாக்கு எண்ணிக்கை!