ஆங்கில புத்தாண்டையொட்டி திமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
2025 ஆங்கில புத்தாண்டு இன்று (ஜனவரி 1) உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு முதலே ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூடி ஆடிப்பாடி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த நிலையில் திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதன்படி சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ். ஜெகத்ரட்சகன், கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோருடன் ஏராளமான திமுக நிர்வாகிகளும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள ஸ்டாலின், அதனை “உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக புத்தாண்டு வாழ்த்தாக, “புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள்! புத்தாண்டு 2025 சூரியன் உதயமாகும்போது, அன்பு, சமத்துவம் மற்றும் முன்னேற்றத்துடன் 2024 இன் வெற்றிகளைக் கட்டியெழுப்புவோம். அனைவருக்கும் ஒற்றுமை மற்றும் சாத்தியங்கள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்” என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா