வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின விழா தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் வழக்கமாக ஏற்பாடு செய்யப்படும் தேநீர் விருந்து இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆளுநரோடு தொடர் உரசலில் இருக்கும் திமுகவின் கூட்டணி கட்சிகள் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இன்னும் சொல்லப்போனால் திமுக தலைமையிடம் இருந்து ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை நமது கூட்டணி புறக்கணிக்கலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே அந்த முடிவில் இருந்த கூட்டணி கட்சிகள் திமுகவின் முடிவும் அதுதான் என்று மகிழ்ச்சியடைந்தன.
அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாது என்று அறிவித்தார்.
இதற்கிடையில் திமுக தலைமைக்கு நெருக்கமான சிலர் முதலமைச்சர் ஸ்டாலினிடம், ’ஆகஸ்ட் 19ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுவதற்கு ஒன்றிய அமைச்சர் ராஜநாத் சிங் வருகிறார். இந்த நிலையில் வீண் உரசல்களை தவிர்க்க, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் பங்கேற்கலாம்’ என்று ஆலோசனை கூறினார்கள். ஆளுநர் மாளிகையில் இருந்தும் முறைப்படி முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவுக்குப் பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதலமைச்சர் கலந்து கொள்வார்’ என்று அறிவித்தார், இது திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
அரசுக்கு ஒரு நிலைப்பாடு அரசியலுக்கு ஒரு நிலைப்பாடு என்பது திமுகவிடம் இருக்கிறது என்று திமுக கூட்டணிக்குள் சலசலப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
இதைவிட கூட்டணிக் கட்சிகளை வருத்தப்படுத்திய இன்னொரு நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவிற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தது தான்.
கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவிற்காக எதிர்க்கட்சிகளை அழைக்கும் பொறுப்பு திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனிடம் அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோருக்கு பத்திரிக்கை வைக்கும் பொறுப்பு அவரிடம் அளிக்கப்பட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமி அலுவலகத்திற்கு தொலைபேசி செய்து நேரம் கேட்டபோது நீங்கள் வீட்டில் பத்திரிக்கையை கொடுத்து விடுங்கள் என்று பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படியே வீட்டில் சென்று பத்திரிகை வைத்துவிட்டார்கள். அப்போது எடப்பாடி அங்கே இல்லை.
அதேபோல ஓ பன்னீர்செல்வத்தின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்த போது நேரில் பெற்றுக் கொள்வதாக தெரிவித்த பன்னீர்செல்வம் அதற்கான நேரமும் கொடுத்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பூச்சி முருகன் தரப்பினர் நேரம் கேட்டனர். அப்போது அழைப்பிதழை நேரில் பெற்றுக் கொள்ள விரும்பி அதற்கு நேரமும் கொடுத்தார் அண்ணாமலை.
இந்த நிலையில்தான் அழைப்பிதழை பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘அண்ணன் பூச்சி முருகன் எனக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா அழைப்பிதழை அளித்தார். அத்தோடு முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்போடு அழைத்தார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதே நேரம் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் தலைமை கழக நிர்வாகிகள் மூலம் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியிட்டு விழா அழைப்பிதழ் நேரில் அளிக்கப்பட்டது அழைப்பிதழ் அளித்ததோடு இருந்துவிடாமல் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூட்டணிக் கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நிகழ்வுக்கு அவசியம் வருமாறு முதலமைச்சர் சார்பில் அழைத்தார்.
ஆட்சி அமைந்த புதிதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை எளிதில் சந்திக்க முடியவில்லை என்று வருத்தத்தை தெரிவித்தனர். அப்போது இதை அறிந்த முதலமைச்சர், ’உங்களது தேவைகள், கோரிக்கைகள், புகார்கள் எதுவாக இருந்தாலும் அமைச்சர் வேலுவிடம் கூறுங்கள். என் சார்பில் அவர் உங்களோடு எப்போதும் தொடர்பில் இருப்பார்’ என்று தெரிவித்திருந்தார்.
அதன்படியே முதல்வர் ஸ்டாலினுக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான பாலமாகவே செயல்பட்டு வருகிறார் அமைச்சர் வேலு. அந்த அடிப்படையில் தான் கலைஞர் நாணய வெளியீட்டு விழாவுக்கு கூட்டணி கட்சி தலைவர்களை முதலமைச்சர் சார்பில் அமைச்சர் வேலு தொடர்புகொண்டு அழைத்திருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் திமுக அரசை மிகக் கடுமையாக நாகரிகம் இல்லாமல் விமர்சித்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, முதலமைச்சர் ஸ்டாலினே தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்துள்ளார்.
அண்ணாமலைக்கு இப்படிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வரும் கேள்வி.
ஏற்கனவே ஓரிரு மாதங்களுக்கு முன் அதானி தரப்பினர் சென்னை வந்தபோது அவர்கள் முதல்வரின் மாப்பிள்ளை சபரீசனை சந்தித்ததாக தகவல்கள் வெளிவந்தன. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அதானிக்கு மிகவும் அறிமுகமானவர். எந்த அளவுக்கு என்றால், கௌதம் அதானியை… ‘கௌதம்’ என்று பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு! இந்நிலையில் அதானி தரப்பினரை திமுக தரப்பினர் சந்தித்ததாக வந்த செய்தி பற்றி விசாரித்து அறிந்திருக்கிறார். அதில் ப.சிக்கு வருத்தமும் உண்டு. இந்த நிலையில்தான் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து மேடைகளில் திமுகவை நோக்கிய கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.
இப்படி ஏற்கனவே திமுக மீது ராகுல் வரை வருத்ததில் இருக்கும் நிலையில்… ஆளுநர் மாளிகை தேனீர் விருந்து, ராஜ்நாத் சிங் வருகை, அண்ணாமலைக்கு போன் போட்டு ஸ்பெஷல் அழைப்பு என்ற ஸ்டாலின் செயல்பாடுகள் காங்கிரஸூக்குள் கூடுதல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவுக்கு மூத்த ஒன்றிய அமைச்சர் என்ற வகையில் ராஜ் நாத் சிங் வருகிறார். அப்போது நமது மாநிலக் கட்சித் தலைமைக்கு உரிய முறையில் அழைப்பு அளிக்கப்பட்டதா என்று டெல்லி பாஜக தலைமை அறிய விரும்பக் கூடும். முதல்வர் ஸ்டாலினுக்கு கலைஞரின் நாணய வெளியீட்டு விழா எவ்வித நெருடலும் இன்றி நடைபெற வேண்டும் என்பதே நோக்கம். தனது தந்தை மற்றும் தலைவரின் விழா அரசியல் பேதம் இல்லாமல் முழுமையாக நிறைவாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். மற்றபடி இதில் வேறு எதுவும் கிடையாது’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறேனா? – சஸ்பென்ஸை உடைத்த பிரபல இயக்குநர்!
நீயும் என்ன விட்டுட்டு டீ பார்ட்டிக்கு போயிட்டியா? : அப்டேட் குமாரு