கட்சி தொடங்கியதும் முதல்வராக நினைக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். Stalin indirectly spoke about Vijay
கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி சென்றுள்ளார்.
இந்த நிலையில் பல்வேறு மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா இன்று (பிப்ரவரி 6) மாலை பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
அதிமுகவில் இருந்து 10 பேர் உட்பட பல நூறு பேர் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுகவை பொருத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றக்கூடிய கட்சி. ஏழை எளிய மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, பாட்டாளி மற்றும் விவசாய மக்களுக்காக, ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களுக்காக பாடுபடும் என்று இந்த கட்சி தொடங்கும் போது அண்ணா சொன்னார்.
இன்று சிலர் கட்சி தொடங்கும் போது அடுத்து நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம் , அடுத்து நான்தான் முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்டு கட்சி தொடங்குகிறார்கள். இதெல்லாம் மக்களிடத்தில் எடுப்படாது.
யார் மக்களுக்காக பணியாற்றுவார்கள்? யார் மக்களுக்காக தொண்டாற்றுவார்கள் என்பதெல்லாம் மக்களுக்கு தெரியும்.
திமுக தொடங்கும் போது கூட, தேர்தலில் நிற்கலாமா வேண்டாமா என்று ஓட்டுப்பெட்டி வைத்து அதன் பிறகு முடிவு செய்தோம்.
1957ல் முதன் முதலில் வெற்றி பெற்றோம். 1967ல் ஆட்சிக்கு வந்தோம். ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளோம். ஏழாவது முறையும் நாம் ஆட்சி அமைப்போம்” என்று கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து நடிகர் விஜய் தொட்ங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அவரை மறைமுகமாக குறிப்பிடும் வகையில், கட்சி தொடங்கியதும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். Stalin indirectly spoke about Vijay