தென் தமிழகத்தில் முதல் டைடல் பார்க்… திறந்து வைத்தார் ஸ்டாலின்

Published On:

| By christopher

ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 29) திறந்து வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த மாதம் முதல் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அப்போது அந்த மாவட்டங்களில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

இந்த நிலையில் மினி டைடல் பூங்கா திறப்பு, புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் இன்று மதியம் தூத்துக்குடிக்கு சென்றார்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் சென்ற அவருக்கு திமுக எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ராதா கிருஷணன், கீதா ஜீவன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மீளவிட்டானில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைக்க சென்ற அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்டாலினும் வேனை விட்டு இறங்கி பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

பின்னர் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைத்த ஸ்டாலின், புதிய நிறுவனங்களுக்கு இட ஒப்பந்த ஆணைகளை வழங்கினார்.

சுமார் 600 தகவல் ஐடி ஊழியர்கள் பணிபுரியும் வகையில், ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்காவில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய பல்வேறு வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் பெருமிதம்!

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தென் தமிழ்நாட்டின் முதல் TIDEL பூங்கா, தூத்துக்குடியில், இளம் திறமைகளுக்கான பாதையை உருவாக்கி, வாய்ப்பின் புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.

விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மற்றும் தூத்துக்குடியில் பட்டாபிராம் TIDEL பூங்கா மற்றும் TIDEL நியோ திட்டங்களால், தமிழகத்தின் வளர்ச்சிக் கதை தொடர்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள TIDEL பூங்காக்கள் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கி, திராவிட மாடலின் கீழ் உள்ளடங்கிய மற்றும் சமமான முன்னேற்றத்தை உண்டாக்குகின்றன.

வேலூர், திருப்பூர் மற்றும் காரைக்குடியில் வரவிருக்கும் TIDEL பூங்காக்கள் இந்த வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

WTC பைனலுக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா… இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதா?

அன்புமணியை தலைவர் ஆக்கியது ஏன்? : ராமதாஸ் தன்னிடம் கூறியதை பகிர்ந்த சீமான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share