இரண்டு நாட்கள் கள ஆய்வுக்காக நெல்லை மாவட்டத்திற்கு இன்று (பிப்ரவரி 6) வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். stalin inaugurates tata solar
புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும், ஏற்கனவே முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதற்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9.35 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக, கங்கைகொண்டானுக்கு ஸ்டாலின் சென்றார்.
கங்கைகொண்டான் செல்லும் வழியில் கே.டி.சி.நகர் ரவுண்டானாவில், திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாலையில் இரு புறங்களிலும் குவிந்திருந்த பொதுமக்களை கண்ட ஸ்டாலின், காரிலிருந்து வெளியேறி சாலையில் சிறிது தூரம் நடந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் கங்கைகொண்டான் சென்ற ஸ்டாலின், ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். இந்த நிறுவனத்தின் மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல, விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நெல்லை நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராபர்ட் புரூஸ், நெல்லை சட்டமன்ற உறுப்பினரான பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் முதல்வருடன் மேடையில் இருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் மதிய உணவுக்கு பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 6.30 மணியளவில் பாளையங்கோட்டை நேருஜி திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார். stalin inaugurates tata solar