இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக தான். எனவே அவர்கள் எங்களை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
அதனைத்தொடந்து இன்று (ஜூலை 19) காலை டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தை பார்வையிட்டார்.
330 இடங்களில் வெற்றி பெறும்!
பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டு எனது கருத்துகளை தெரிவித்துள்ளேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஒத்த கருத்துகளுடன் கூடிய கட்சிகளுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி நாடு முழுவதும் 330 இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புகிறோம்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி கடந்த 9 ஆண்டுகளில் சிறப்பான உச்சத்தை எட்டியுள்ளது. உலகளவில் இந்திய நாட்டின் பெருமையை அவர் உயர்த்தியிருக்கிறார்.
என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பின்வாங்கும் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. சிறிய, பெரிய கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணியில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
எங்களது கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் சுதந்திரமாக உள்ளது. திமுக உள்ள கூட்டணி அடிமையாக உள்ளது.
கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமையும். ஆனால் கட்சியின் கொள்கை என்பது நிலையானது. 1999 ஆம் ஆண்டு திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லையா?
கூட்டணி என்று வரும்போது எங்களை பொறுத்தவரை தேசிய அளவில் பாஜகவும், தமிழகத்தில் அதிமுகவும் தலைமை வகிக்கும்.
அதிமுகவை விமர்சிக்க அருகதை கிடையாது!
இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக தான். அவர்கள் எங்களை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற 2ஜி வழக்கில் திமுக கூட்டணியில் இருந்தும் கூட கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று ஸ்டாலின் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இருந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது.
திமுகவை சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார். அமைச்சர் பொன்முடி விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை விமர்சிக்க எந்த அருகதையும் கிடையாது.
உண்மைக்கு கிடைத்த வெற்றி!
சென்னை உயர்நீதிமன்றம் நேற்று என் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் அளித்த தீர்ப்பு சாதகமானது கிடையாது. அது உண்மைக்கு கிடைத்த வெற்றி. அதிமுக ஆட்சியில் டெண்டர் அறிவிக்கப்பட்டது உண்மை. ஆனால் பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. அதில் குறிப்பிட்ட தொகை ஊழல் செய்ததாக கூறி போடப்பட்ட பொய்வழக்கில் தான் நேற்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
கொடநாடு வழக்கிலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். கொடநாடு சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கைது செய்து சிறையிலடைத்தது அதிமுக அரசு தான். அதே வேளையில் குற்றவாளிக்கு ஜாமீன் தாரராகவும், அவர்களுக்கு ஆதரவாகவும் வாதாடியது திமுகவை சேர்ந்தவர்கள். குற்றவாளிகளுக்கும், திமுகவுக்கும் உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும் என்று தான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் கூறியுள்ளேன்.
ஆவணியில் திறப்பு விழா!
டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகத்தை ஆடி போய் ஆவணியில் திறந்து விடுவோம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
ஜி.வி.பிரகாஷின் 100 வது பட அப்டேட்!
சென்னை மெட்ரோ வழித்தடம் 3: ரயில் நிலையங்கள் எங்கெங்கே?
அனைத்து தரப்பினருக்குமான வந்தே பாரத் ரயில்: ஐசிஎஃப்பில் தயாராகிறது!
Comments are closed.