அரிட்டாபட்டி கிராம மக்களின் அன்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் நாளை அங்கு செல்லவுள்ளார்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வரவிருந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மதுரை மேலூர் தாலுகாவை உள்ளடக்கிய கிராம மக்களின் தொடர் போராட்டம், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அரசியல் கட்சியினரின் அழுத்தம் ஆகியவற்றை தொடர்ந்து இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் வராது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்தார்.
இந்தநிலையில், டங்ஸ்டன் சுரங்கம் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மதுரை மாவட்டம் – அரிட்டாபட்டி, வள்ளலார் பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, தெற்கு தெரு, மீனாட்சிபுரம், மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த கிராம மக்கள் சென்னை வந்தனர்.
இவர்கள் இன்று(ஜனவரி 25) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஸ்டாலினைச் சந்தித்த கிராம மக்கள்
அப்போது, ”உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா அரிட்டாபட்டியில் நாளை நடைபெறுகிறது. இதற்கு நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தனர்.
அவரிகளிடம் கண்டிப்பாக வருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
இதையடுத்து கிராம மக்கள் செய்தியாளார்களைச் சந்தித்து கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து போராடினாலும் கூட மத்திய அரசு கடைசியில் தான் இசைந்தது. டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்வதற்கு முழு காரணமாக இருந்தவர் முதல்வர் ஸ்டாலின். இவ்வளவு பெரிய காரியத்தை செய்த அவரை எங்கள் ஊருக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம்” என்று கூறினர்.
அவர்களிடம், பாஜக அரசுதானே ரத்து செய்தது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு அவர்கள், “ஒருவனை வெட்டிவிட்டு, நான்தான் உனக்கு வைத்தியம் பார்த்தேன் என்று சொன்னால் எப்படி? டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தது யார்?
முதல்வர் பதவியில் இருக்கும் வரை விடமாட்டேன் என்றெல்லாம் சொல்லி எங்களுக்கு துணையாக இருந்தவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மதுரை அமைச்சர் மூர்த்திதான்” என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின், உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்! என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.