டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி கைது – அதிமுக கூட்டணியை புதுப்பித்த ஸ்டாலின்

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்  இன்ஸ்டாகிராமில் சில வீடியோக்கள் வந்து விழுந்தன.

அக்டோபர் 19 ஆம் தேதி  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய காட்சிகள்தான் அவை. 

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை  டைப் செய்யத் தொடங்கியது.

“சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.பி உதயகுமாருக்கு உரிய இடம் ஒதுக்காததைக் கண்டித்தும்,  ஓ.பன்னீர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டும் சட்டமன்றத்தில் அவரை எடப்பாடிக்கு அருகே அமரவைத்ததை எதிர்த்தும் அதிமுகவினர் சட்டமன்றத்தில் அமளி செய்தனர்.

அதையடுத்து அவர்கள் 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் அக்டோபர்  19 ஆம் தேதி   சட்டமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை நடந்திருக்கிறது என்று கூறி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார் எடப்பாடி.

அன்று காலை 9 மணிக்கே அவர் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத ஸ்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில்,அவரை போலீஸார் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்தனர்.

Stalin gave life to AIADMK alliance by arresting Edappadi

ஆனால் அதை எதிர்த்து எடப்பாடியும் அவருடன் வந்த 62 சட்டமன்ற உறுப்பினர்களும், அதிமுக நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே பரபரப்பு நிலவியது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 1300 பேரை  கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர் போலீஸார். அந்த மைதான வாசலில் போலீஸ் குவிக்கப்பட்டது.

இந்தத் தகவல்  அறிந்து சில நிமிடங்களிலேயே புரட்சி பாரதம் கட்சியின்  தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி,  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர்  நேரில் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தனர்.

Stalin gave life to AIADMK alliance by arresting Edappadi

இந்த செய்தி டிவிகளில் உடனடியாக ஃப்ளாஷ் ஆக, போலீஸாருக்கு ஓர் உத்தரவு பறந்து வந்தது. அதாவது இனி எந்தத் தலைவரும் எடப்பாடியை பார்க்க வந்தால் அவர்களை  சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்பதுதான் அந்த உத்தரவு.

Stalin gave life to AIADMK alliance by arresting Edappadi

அதையடுத்து போலீசார் கெடுபிடி காட்ட ஆரம்பித்தனர். கொஞ்ச நேரத்தில் தமிழக சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர்  ஜி.கே.வாசன்,  தமிழக மக்கள் முன்னேற்றக் கழக  தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமியை பார்க்க வந்தனர்.

ஆனால், அவர்களிடம்  போலீஸார் ‘அவர் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதற்காக  தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்பது மேலிட உத்தரவு சார்’ என்று சொல்லிவிட்டனர்.

இதை எதிர்த்த ஜி.கே.வாசன் உடனடியாக அங்கே சாலை மறியலில் ஈடுபட்டார். ஆனாலும் போலீஸார் அவரை அனுமதிக்கவில்லை. ஜான் பாண்டியன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டவர். அந்த அடிப்படையில் அவர் எடப்பாடியை பார்க்க வந்தார். அவரையும்  போலீஸ் அனுமதிக்கவில்லை.  

Stalin gave life to AIADMK alliance by arresting Edappadi

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்து இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. ஆனாலும் கூட குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவளித்தது.

இந்த பின்னணியில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ மாநில பாஜக தரப்பிலிருந்தோ யாரும் எடப்பாடியை சென்று சந்திக்கவில்லை. ஆனால் சட்டமன்ற விவாகரத்துக்காக எடப்பாடி பழனிசாமி போராடியதால் சட்டமன்ற கட்சித் தலைவரான நயினார் நாகேந்திரன் சந்திக்க வந்திருக்கிறார்.

Stalin gave life to AIADMK alliance by arresting Edappadi

ஆனபோதும் அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. ஜி.கே.வாசன் போல மற்றவர்கள் போராடாமல் சென்றுவிட்டனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக  உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. மேலும் சட்டமன்றத்திலும் எடப்பாடிக்கு பாமக ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஆனால், இன்று (அக்டோபர் 20) கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி, ‘சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை பலத்தை அடிப்படையாக வைத்து சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

Stalin gave life to AIADMK alliance by arresting Edappadi

இதுவே இந்த விவகாரத்தில்  எடப்பாடிக்கு ஆதரவு நிலைப்பாடுதான். எடப்பாடி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் அதிமுகவினரிடையே எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அனைவரும் கருப்புச் சட்டை, கைது செய்யப்படவும் தயாரான நிலையில் வரவேண்டும் என்று எடப்பாடி ஏற்கனவே தெரிவித்துவிட்டார். அதற்கேற்றபடிதான் எம்.எல்.ஏ.க்களும் நிர்வாகிகளும் வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை கூட்டணிக் கட்சியினரும் சந்தித்தால், ‘இந்த போராட்டத்தின் மூலம் அதிமுக கூட்டணி புதுப்பிக்கப்பட்டுவிடும்’ என்று கருதியிருக்கிறது  ஆளுங்கட்சி மேலிடம்.

அதனால்தான் கூட்டணிக் கட்சிப் பிரமுகர்களை எடப்பாடியோடு சந்திப்பு நடத்தாமல் திருப்பி அனுப்பியிருக்கிறது போலீஸ்.

இந்தத் தகவல்களை எல்லாம்  உள்ளே இருந்தபடியே கேட்டுத் தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு போன் செய்து பேசியுள்ளார்.

மேலும் சந்திக்க வந்த தலைவர்களையும், சந்திக்க வந்து  போலீசாரால் தடுக்கப்பட்ட தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்து அதன் மூலம் அதிமுக கூட்டணியை மேலும் உறுதிப்படுத்தலாம் என்று எடப்பாடியிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது நல்ல யோசனைதான் என்று சொல்லி கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து நன்றி சொல்லவும் திட்டமிட்டுள்ளார் எடப்பாடி.

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அதிமுக உட்கட்சி விவகாரங்களில்  சிக்கி சின்னாபின்னப்பட்டு  வருகிறது.  அதிமுகவுக்கு தலைமை யார் என்ற  போராட்டமே அதிகமாக நடந்ததால் எடப்பாடியால் அதிமுக கூட்டணி பற்றி சிந்திக்கவே முடியவில்லை. 

Stalin gave life to AIADMK alliance by arresting Edappadi

இந்த நிலையில் எடப்பாடி நடத்திய போராட்டத்தின் மூலம் அதிமுக தலைமையிலான கூட்டணி புதுப்பிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு ஒரு வகையில் ஸ்டாலினே காரணமாகிவிட்டார் என்று அதிமுக நிர்வாகிகளே சொல்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட்  கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

தீபாவளி பயணம்: மெட்ரோ முக்கிய அறிவிப்பு!

நவம்பர் 1: கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு!

+1
0
+1
5
+1
1
+1
1
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *