வைஃபை ஆன் செய்ததும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக ஈரோடு முத்துசாமி நியமிக்கப்பட்ட அரசு அறிவிப்பு இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
இதை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இதுவரை இருந்த செந்தில் பாலாஜியை விடுவித்துவிட்டு அவருக்கு பதிலாக வீட்டு வசதி துறை அமைச்சர் ஈரோடு முத்துசாமி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இன்று பிறப்பித்திருக்கிறார்.
செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்… முதலமைச்சர் ஸ்டாலின் விரைந்து சென்று அவரை அங்கே நலம் விசாரித்தார். அவருக்கு முன்பே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் அதிகாலையே ஓமந்தூரார் மருத்துவமனைக்கு படை எடுத்தனர்.
செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று பார்ப்பதில் சட்ட சிக்கல் எதுவும் இருக்கிறதா என்று அப்போதே ஆலோசித்தார் முதலமைச்சர். ஆனால், ’இப்போது வரை செந்தில் பாலாஜி கைது காட்டப்படவில்லை. எனவே முதலமைச்சராக நீங்கள் சென்று சந்திப்பதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை’ என்று வழக்கறிஞர்கள் அவரிடம் தெரிவித்த பிறகு தான் அன்று மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். அந்தப் புகைப்படமும் வெளியிடப்பட்டது.
அதற்குப் பிறகு செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறைகளை முறையே தங்கம் தென்னரசு மற்றும் ஈரோடு முத்துசாமி ஆகியோருக்கு பகிர்ந்து கொடுத்தார் முதலமைச்சர். அதே நேரம் செந்தில் பாலாஜியை துறையில்லாத அமைச்சராக தொடர வைத்தார். இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டது.
ஆளுநர் முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க மறுத்ததால் அரசாணையாகவே வெளியிட்டார் முதலமைச்சர். செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் உத்தரவிட, சில மணி நேரங்களில் அந்த உத்தரவை ஆளுநரே நிறுத்தி வைத்தார்.
செந்தில் பாலாஜியை முதல்வர் இந்த அளவுக்கு தாங்கிப் பிடிப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். அதே நேரம் இதே தொனியில், திமுகவின் சீனியர் அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் தங்களுக்குள்ளேயே ஆதங்கப்பட்டு கொண்டனர். சீனியர் அமைச்சர்களின் இந்த ஆதங்கம் அவர்களது செய்தியாளர் சந்திப்பிலேயே மறைமுகமாக தெரிந்தது. கடைசியாக திமுக பொதுச்செயலாளர் நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகனிடம், செந்தில் பாலாஜி பற்றிய கேள்வி கேட்கப்பட்டபோது ’ஆளை விடுங்கோ’ என்று சொல்லிச் சென்றார் துரைமுருகன்.
இதற்கிடையில் காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை… உடல் நலம் விசாரிப்பதற்காக முதலமைச்சர் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து வாரங்கள் கடந்தும் முதல்வர் சென்று செந்தில்பாலாஜியை சந்திக்கவில்லை.
தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்தாலும் அவர் நீதிமன்ற காவலில் இருப்பதால் அது சிறையாகவே கருதப்படுகிறது. புழல் சிறையின் அதிகாரி மருத்துவமனையில் கண்காணிப்பு பணியில் இருக்கிறார். செந்தில் பாலாஜி சந்திக்க வேண்டும் என்றால் சிறையில் மனு போட்டு செல்வது போலதான் செல்ல வேண்டும்.
இந்த வகையில் செந்தில் பாலாஜியை சந்திக்கலாமா என்ற கோரிக்கை முதலமைச்சரிடம் சில அமைச்சர்கள் சார்பில் வைக்கப்பட்டபோது வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனைக்கு தேடிச்சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்… இதய அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் செந்தில் பாலாஜியை அவர் கைதியாக இருந்தால் கூட சந்திக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற உதயநிதி, சபரீசன் போன்றவர்களும் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரிக்கவில்லை. அவர்கள் விசாரிக்க விரும்பினாலும் முதலமைச்சர் அதை தடுத்து விட்டதாக ஒரு தகவல் உலவுகிறது.
இதற்கிடையே ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும் காவேரி மருத்துவமனை மருத்துவருமான டாக்டர் எழிலன் செந்தில் பாலாஜிக்கும் குடும்ப மருத்துவர் ஆவார். அவர் அவ்வப்போது மருத்துவமனையில் இருக்கும் செந்தில் பாலாஜியை சந்திக்கும்போது… ‘முதலமைச்சருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார் செந்தில்பாலாஜி. அதற்கு எழிலன் நான் அவரிடம் தெரியப்படுத்தி விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்ல… செந்தில்பாலாஜி ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு ஆகிய துறைகளை இப்போது கவனித்து வரும் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோர் கடந்த இரு வருடங்களாக அந்தத் துறைகளில் நடந்திருக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்கள் சிலவற்றை முதல்வரிடம் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இவ்வளவுப் பின்னணியில் தான் தற்போது கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக ஈரோடு முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வந்த கோவை மாவட்ட திமுகவின் சீனியர் நிர்வாகிகள் பலர் இந்த அறிவிப்பை வரவேற்கிறார்கள்.
இதே போல கரூர் திமுக மாவட்ட செயலாளராக தற்போது பொறுப்பு வகிக்கும் செந்தில் பாலாஜிக்கு பதிலாக வேறு ஒருவரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கையும் கரூர் திமுகவினரிடமிருந்து தலைமைக்கு சென்றுள்ளது. எம்பி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கட்சி நடவடிக்கைகளை முடுக்கி விடவும் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை நடத்தவும் மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று கரூர் திமுக நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
எனவே சட்ட ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் செந்தில்பாலாஜியின் தற்போதைய நிலையை கருதி விரைவில் திமுகவின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் என்ற தகவலும் கிடைக்கிறது. நியமிக்கப்படுபவர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளராக இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
இதையெல்லாம் வைத்து செந்தில் பாலாஜியை இவ்வளவு நாள் தாங்கிப் பிடித்த ஸ்டாலின் தற்போது கட்சி ரீதியாக அவரை ஓரங்கட்டுகிறாரோ என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது” என்ற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ’காவாலா’: எப்படி இருக்கு?
விஜய் உத்தரவின் பேரில் மிரட்டல்: டிஜிபியிடம் புகார்!