இளங்கோவன் வீட்டில் ஸ்டாலின்: மகனுக்கு பதிலாய் அப்பா வேட்பாளரான பின்னணி!

அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடக்கும் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

“எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. இளைய தலைமுறைக்கு இளைய சமுதாயத்துக்கு வழிவிட விரும்புகிறேன். கட்சி என்னைக் கேட்டால் என் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு இந்த வாய்ப்பைக் கேட்பேன்” என்று ஜனவரி 21 ஆம் தேதி செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காலஞ்சென்ற திருமகன் ஈவேராவின் தம்பியும், இளங்கோவனின் இளைய மகனுமான சஞ்சய் சம்பத்தே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இளங்கோவனும் இதையே எதிர்பார்த்து, ஈரோட்டில் இருந்து தன் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை சென்னை வரச் சொல்லிவிட்டார். ஜனவரி 20 ஆம் தேதி மாலை சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் அழகிரி கலந்துகொள்ளாத நிலையிலும், மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் வேட்பாளர் தேர்வு கூட்டம் நடந்தது. அதிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டு தன் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து சஞ்சய் சம்பத் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவதற்கான விருப்ப மனுவையும் குண்டுராவிடம் வழங்கினார்.

இதற்கிடையே, மாநிலத் தலைவர் கே.எஸ்,. அழகிரி இந்த இடைத்தேர்தலில் இளங்கோவன் நிற்பதையே விரும்பினார். இளங்கோவன் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்குள்ள சீனியாரிட்டி அடிப்படையில் இளங்கோவனே சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அப்போது செல்வப் பெருந்தகை அந்த பதவியில் இருந்து அகற்றப்படுவார். தனக்கு எதிராக பிற தலைவர்களை ஒருங்கிணைத்து டெல்லி வரை சென்ற செல்வப் பெருந்தகைக்கு எதிராக இந்த காய் நகர்த்தலை முயற்சித்தார் அழகிரி. ஆனால் இளங்கோவன் இதற்கு ஒப்புக் கொள்ளாமல், தனக்கு போட்டியிட விருப்பமில்லை என்றும் தன் இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்பேன் என்றும் வெளிப்படையாக அறிவித்தார்.

இந்த நிலையில்தான் சஞ்சய் சம்பத் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்துவிட்டு சென்னை மணப்பாக்கம் வீட்டுக்கு மகனோடு திரும்பினார் இளங்கோவன்.


இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜனவரி 22) ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட மணப்பாக்கம் – கெருகம்பாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் உட்புறச் சாலைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இளங்கோவனின் வீடு மணப்பாக்கத்தில்தான் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தங்கள் பகுதிக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்த இளங்கோவன் நேரடியாக முதல்வரை தன் மகனோடு சென்று சந்தித்தார். அப்போது, ‘பக்கத்துலதான் என் வீடு, நீங்க வரணும்’ என்று இளங்கோவன் அழைக்க… அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரோடு இளங்கோவன் வீட்டுக்கு சென்றார் முதல்வர் ஸ்டாலின்.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த மறைந்த திருமகன் ஈவெரா படத்துக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் இளங்கோவனிடம் சில நிமிடங்கள் பேசியிருக்கிறார்.
அப்போது, ‘நீங்க உங்க ரெண்டாவது பையனை இடைத் தேர்தல்ல போட்டியிட விரும்புவதா சொல்லியிருந்தீங்க. எங்க விருப்பம் என்னன்னா நீங்களே இந்தத் தேர்தல்ல போட்டியிடணும். இந்த இடைத் தேர்தலில் உங்களைப் போல ஒரு பெரிய மாஸ் தலைவர் போட்டியிடணும். அதுமட்டுமில்ல சட்டமன்றத்துல உங்க பேச்சைக் கேட்கணும். நீங்க சட்டமன்றத்துக்கு 1985 க்குப் பிறகு நீங்க தேர்ந்தெடுக்கப்படவே இல்லை. அதனால இந்த முறை நீங்க சட்டமன்றத்துக்கு வரணும். சஞ்சய்க்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதனால கவலைப்படாதீங்க’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
இதைக் கேட்ட இளங்கோவன், ‘என் பையன் பெயரை ஈரோட்டில் ஒரு தெருவுக்கு சூட்டினீங்க. எனக்கு காமராஜர் விருது கொடுத்தீங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதுனு தெரியலைனு அன்னிக்கே பிரஸ்ல சொன்னேன். இப்பவும் சொல்றேன்’ என்று பதிலளித்திருக்கிறார்.

ஏற்கனவே டி.ஆர்.பாலு மூலமாக டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, ‘இந்த இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வெற்றிக் கொள்ள ஈவிகேஸ் இளங்கோவன் தான் பொருத்தமான ஆள்’ என்று அழுத்தமான மெசேஜையும் தெரிவித்திருந்தார் ஸ்டாலின். அதற்கு இளங்கோவன் சம்மதிக்க வேண்டும் என்பதால்தான் நேரிலும் அவரை சென்று சந்தித்திருக்கிறார் ஸ்டாலின்.

இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடு தேடிச் சென்று ஈவிகேஸ் இளங்கோவனை சந்தித்த நான்கு மணி நேரத்தில்… ‘ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன்’ என்று காங்கிரஸ் தேசிய தலைமையிடம் இருந்து அறிவிப்பு வந்தது.

காங்கிரஸ் வேட்பாளரை திமுக தேர்ந்தெடுப்பதா என்று காங்கிரசுக்குள் ஆங்காங்கே சில விமர்சனக் குரல்கள் எழுந்தாலும்… ‘ஈரோடு கிழக்கு தொகுதியின் தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு நிலையிலும் கவனமாக செயல்பட முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின். பாஜக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதையெல்லாம் எதிர்கொள்ள ஈவிகேஸ் இளங்கோவனால் மட்டுமே முடியும் என்றும் கருதியே ஸ்டாலின் இந்த யோசனையை முன் வைத்தார்’ என்கிறார்கள்.

அதேநேரம் நாம் ஈரோடு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசியபோது, “எங்கள் தலைவர் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் இளங்கோவனுக்கு உடல் நலம்தான் பிரச்சினையாக உள்ளது. மகனை இழந்த சோகத்தில் இருக்கிறார். இடைத் தேர்தலுக்காக அவர் கடுமையாக அலைய வேண்டுமே என்பதுதான் எங்கள் கவலையாக இருக்கிறது. அவரை அதிகமாக அலைய விடாமல் பார்த்துக் கொள்வோம்” என்கிறார்கள்.

ஆரா

பிக் பாஸ் வெற்றி: அசீம் சொன்ன பஞ்ச்!

தமிழ்நாட்டுக்கு ‘திரும்பினார்’ ஆளுநர் ஆர்.என்.ரவி

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *