“ப்ரீத்திக்கு நான் கேரண்டி” : மோடியை விமர்சித்த ஸ்டாலின்

அரசியல்

“ப்ரீத்திக்கு நான் கேரண்டி” என்ற விளம்பரம் போல் பிரதமர் மோடி கேரண்டி விளம்பரம் செய்து வருகிறார் என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் விமர்சித்தார்.

தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்ரீகுமார், விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று (மார்ச் 27) பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர்,  “சீனப் பட்டாசுகளை பாஜக அரசால் முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால், சிவகாசியில் 1000 கோடி ரூபாய் அளவுக்குப் பட்டாசு தயாரிப்பு சரிவை சந்தித்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

“தேர்தல் வந்துவிட்டால், கூடவே மக்கள் மேல் மோடிக்கு கரிசனமும் பொங்கி வரும். திடீரென்று விலையெல்லாம் குறைப்பார். இப்போதுகூட சிலிண்டர் விலையை – பெட்ரோல் விலையை – டீசல் விலையைக் குறைத்திருக்கிறார்.

விலையை ஏற்றியது யார்? மோடி பிரதமரான நாள் முதல் விலை ஏறிக்கொண்டே இருந்தது. ஆனால், விலையேற்றத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் இருப்பார். தேர்தல் நேரம் வந்துவிட்டால் மட்டும் விலையைக் குறைக்கும் பவர் வந்துவிடும்.

மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் என்று உடனடியாக சிலிண்டர் விலையைக் குறைத்தார். வருடா வருடம்தான் மகளிர் தினம் வருகிறது! அப்போதெல்லாம் இதுபோன்று குறைத்தாரா? இல்லையே…

அப்போதெல்லாம் இந்திய நாட்டு மகளிரும் – இந்தியக் குடும்பங்களும் படும் கஷ்டம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இப்போது தேர்தல் வந்ததும் குறைக்கிறார்… என்னவொரு கருணை உள்ளம் அவருக்கு, தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம்.

மோடி பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு, 2013-க்கு முன்னால், சிலிண்டர் விலை எவ்வளவு? 410 ரூபாய்.  பத்து ஆண்டுகள் கழித்து, 2023-இல் சிலிண்டர் விலை எவ்வளவு? 1103 ரூபாய்.

ஐந்து மாநில தேர்தல் வந்துவந்தது. கூடவே மோடிக்கு இரக்கமும் வந்தது. சிலிண்டர் விலை குறைந்தது!. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது, அதனால் 100 ரூபாய் குறைத்திருக்கிறார்.

தேர்தலுக்கு தேர்தல் மட்டும் விலை குறைப்பு செய்வது ’பச்சோந்தி அரசியல்’ இல்லையா? 410 ரூபாய் இருந்த சிலிண்டரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தியதுதான் உங்களின் சாதனை.

தேர்தல் வந்ததால் சிலிண்டர் விலையை மட்டுமல்ல, பெட்ரோல் – டீசல் விலையையும் குறைக்கிறார். விலைக்குறைப்பு என்பது மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி நடத்தும் நாடகம்.

அவரது நாடகங்களை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்…
இப்படிப்பட்ட பிரதமர் மோடியை நீங்கள் நம்புகிறீர்களா? மக்கள் யாருமே அவரை நம்பவில்லை.  உடனே மக்களை நம்ப வைக்க இப்போது புதிய விளம்பரம் ஒன்று செய்கிறார். என்ன தெரியுமா?.

தாய்மார்கள் இங்கு நிறைய பேர் வந்திருக்கிறீர்கள், ஒரு மிக்சி விளம்பரம் வருமே நினைவு இருக்கிறதா? “ப்ரீத்திக்கு நான் கேரண்டி” என்று ஒரு விளம்பரம்… அந்த மாதிரி இவர், “இது மோடியின் கேரண்டி” என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார்.

உண்மையில அவரின் வாக்குறுதிகளுக்கு, கேரண்டியும் இல்லை! வாரண்டியும் இல்லை! பிரதமராக நாட்டு மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னால், பத்தாண்டுகளாகச் சொன்ன எதையுமே செய்யாமல், சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லை.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் போடலாம் என்று சொன்னாரே? 15 இலட்சம் இல்லை, 15 ஆயிரமாவது மக்களுக்கு கொடுத்தாரா? 15 ரூபாயாவது கொடுத்தாரா? அதுமாதிரியான கேரண்டியா?

இல்லை, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொன்னாரே, என்ன ஆனது? உலகத் தொழிலாளர் அமைப்பு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது… இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் 83 விழுக்காடு இளைஞர்கள்

பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதுதான் மோடி சொல்லும், கேரண்டியின் லட்சணம்! புதிது புதிதாக வாக்குறுதி கொடுத்தால், நிறைவேற்றாத பழைய வாக்குறுதியெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடி தப்புக் கணக்கு போடுகிறார்” என்று தெரிவித்தார் ஸ்டாலின்.

மோடி இப்படி வெறும் கையால் முழம் போடுகிறார் என்றால், மற்றொருவர் இருக்கிறார் பழனிசாமி… காற்றிலேயே கம்பு சுற்றுபவர் என்று தெரிவித்த ஸ்டாலின், “நடப்பது நாடாளுமன்றத் தேர்தல்! பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.   பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நடகம் நடத்துகிறாரே… எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா? பிரதமர் பற்றி மட்டுமல்ல; ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை! இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார்!

“ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?” என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார்.

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது? ஆளுநரால் இந்தத் தனிப்பட்ட ஸ்டாலினுக்கோ – தி.மு.க.விற்கோ எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கும் – எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா? இல்லை, பாகப்பிரிவினை, பங்காளி சொத்து பிரச்சினையா? தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதைத் தடுக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களுக்கும் – சட்டமுன்வடிவுகளுக்கும் அனுமதி அளிக்க மறுக்கிறார். இதுதான் எங்களுக்கும் அவருக்குமான பிரச்சினை!

மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடிப்பது, தமிழ்நாடு சட்டமன்றத்தை இழிவுபடுத்துவது இல்லையா? முதலமைச்சரான எனக்கு எப்படி கோபம் வருகிறதோ, அதே கோபம் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமிக்கு வர வேண்டாமா? ஆளுநர் இப்படி இழுத்தடிப்பது தவறு என்று ஆளுநரைக் கேட்டிருக்க வேண்டாமா? அப்படி கேட்க மறுக்கிறார் என்றால், ஒன்று ஆளுநரைப் பார்த்து பயப்படுகிறார் என்று அர்த்தம்” என்று குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அடுத்தடுத்து அதிவேக அரைசதங்கள்.. RCB சாதனையை முறியடித்த SRH..!

“இளையராஜா படத்தில் நான் இருப்பேன்” – பாரதிராஜா வைரல் வீடியோ!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *