பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து வெறும் கையால் முழம் போட்டுக் கொண்டிருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்,
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 11) கலந்துகொண்டார். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செந்தில் குமார், செல்லக்குமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினரும் பாமக கவுரவ தலைவருமான ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அனைத்து மாநிலங்களையும் சமமாக நினைத்து திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. ஆனால், ஒன்றிய பாஜக அப்படி மாநிலங்களை சமமாக நினைக்கின்றதா?
ஒன்றிய அரசு என்றால், எல்லா மாநிலங்களையும் மதித்து வளர்க்க வேண்டும். ஆனால், இன்றைக்கு ஒன்றியத்தை ஆளுகின்ற அரசு அப்படி செயல்படவில்லை.
மாநிலங்களையே அழிக்க நினைக்குது. நம்முடைய மொழியை – இனத்தை – பண்பாட்டை அழிக்கப் பார்க்கிறது.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது நிதி. நிதி ஆதாரத்தை பறிக்கிறது. நிதிதான் மாநிலங்களின் ஆக்சிஜன். அதையே நிறுத்திவிட்டுத் தமிழ்நாடு மேல் பாசமிருப்பது போல் நடிப்பதா?
மாநிலங்கள் ஒன்றிணைந்ததுதான் ஒன்றிய அரசு. இதை உணராமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
தேர்தல் நெருங்கி வருகிறது. பிரதமரும் அடிக்கடி சுற்றுப்பயணம் வருகிறார்.
தேர்தல் காலங்களில் மட்டும், நம்மை எட்டிப் பார்க்கும் பிரதமரின் சுற்றுப்பயணங்கள் – வெற்றுப்பயணங்களே.
2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே இப்போதுதான் கட்டுமானப் பணியை தொடங்கப் போவதாக நாடகம் நடத்துகிறார்கள். தேர்தல் முடிந்ததும் நிறுத்திடுவார்கள்.
தேர்தல் வருகிறது என்று சிலிண்டர் விலையை குறைத்ததுபோல பிரதமர் அறிவிக்கிறார். 10 ஆண்டுகளாக 500 ரூபாய்க்கும் மேல உயர்த்திவிட்டு, இப்போது 100 ரூபாய் மட்டும் குறைக்கிறது, அப்பட்டமான மோசடி வேலையில்லையா இது? இதைவிட மக்களை ஏமாற்றுகிற செயல் இருக்க முடியுமா?
சென்னையில் வெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி – தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி – இப்போது மட்டும் அடிக்கடி வருகிறாரே? என்ன காரணம்? தேர்தல் வரப் போகிறது. ஓட்டு கேட்டுதான் வருகிறார் என்று மக்களுக்குத் தெரியும்.
‘தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி நிதியை கொள்ளையடிக்க நான் விடமாட்டேன்’ என்று சொல்லி இருக்குறார் பிரதமர். தமிழ்நாட்டுக்கு அவர் என்ன வளர்ச்சி நிதியை கொடுத்திருக்கார்?
ஜி.எஸ்.டி வரி இழப்பீட்டு நிறுத்தியதால், தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கவில்லை. வெள்ள நிவாரணமாக நாம் கேட்ட 37 ஆயிரம் கோடியை தரவில்லை. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பணம் தரவில்லை, ஒப்புதலும் வழங்கவில்லை. பிரதமர் வீடுகட்டும் திட்டத்துக்கு முக்கால் பங்கு பணம் தருவது மாநில அரசுதான்.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குகிறற ஜல்ஜீவன் திட்டத்துக்கு மாநில அரசின் பங்களிப்பு 50 விழுக்காடு.
இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது மாநில அரசிடம் பணம் வாங்கித்தான் தன்னுடைய ஸ்டிக்கரை பிரதமர் ஒட்டிக்கிறார் என்று அவருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
இன்னும் கேட்கவேண்டும் என்றால், ஒன்றிய அரசுக்கு வரி வருவாய் எங்கே இருந்து வருகிறது? மாநிலங்களின் வரியாக இருந்தாலும், ஒன்றிய வரியாக இருந்தாலும் மாநிலங்களில் இருக்கின்ற மக்கள் கொடுக்கின்ற வரிதான்.
வெறும் கையால் முழம் போடுவது என்று சொல்லுவார்கள். அதுபோல, தமிழ்நாட்டுக்கு வந்து வெறும் கையால் முழம் போட்டுக் கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல் பாசம் பொங்கும்… இதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால், மக்களும், அரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். இதைத்தான் குடும்ப ஆட்சி என்று விமர்சிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சிறை தண்டனை நிறுத்திவைப்பு : மீண்டும் எம்.எல்.ஏ.வாகும் பொன்முடி?
Nayanthara கனடாவில் கடை திறந்த நயன்தாரா