காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்குத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் போர் நடந்து வருகிறது.
இந்த போரின் உச்சக்கட்டமாக இன்று (அக்டோபர் 18) இஸ்ரேல் ராணுவம் காஸா நகரில் இருக்கும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த வான்வழித் தாக்குதலில் Al-Ahli Baptist மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா, லெபனான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை, இஸ்லாமிய ஜிகாத் அமைப்புதான் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனை மீதான தாக்குதலுக்குத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “போர் என்பதே கொடூரமானது!
அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக காஸா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
உயிருக்குப் பயந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் – உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.
போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா?
உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது.
ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீன் இடையேயான போரில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
நாவலூரில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது: தமிழ்நாடு அரசு