பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் வலைத்தளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதால் முதல்வர் ஸ்டாலின் உட்படப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை காப்பீடு நிறுவனமாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) செயல்படுகிறது. இந்தியர்களுக்கு காப்பீடு என்றால் முதலில் ஞாபகத்திற்கு வரும் நிறுவனம் எல்.ஐ.சி தான். பல லட்சம் பேர் இந்நிறுவனத்தின் பல வகையான காப்பீடு திட்டங்களில் இணைந்துள்ளார்கள்.
இந்நிலையில் எல்.ஐ.சி. வலைத்தளத்தின் முகப்பு முழுவதும் இந்திக்கு மாறியுள்ளது. மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றுவதற்கான பட்டன் வலைத்தளத்தின் வலது மேல் மூலையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பட்டனும் “भाषा”(பாஷா) என இந்தியில் தான் உள்ளது.
இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இதனைக் கண்டித்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்கள்.
முதல்வர் ஸ்டாலின்
ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் “எல்ஐசி இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது!
இது இந்தியாவின் பன்முகத்தன்மையை அவமதித்து, பலவந்தமான கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை.
எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. அவர்களுக்கு எப்படி துரோகம் இழைக்கலாம்?”
இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்.”
எடப்பாடி பழனிசாமி
“பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது.
இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல்.
அது ஏற்புடையதல்ல. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.”என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கேரளா காங்கிரஸ்
“எல்ஐசி நிறுவனம் தனது இணையதளத்தைப் புதுப்பித்து, அனைத்தையும் ஹிந்தி மொழிக்கு மாற்றியுள்ளது.
ஒருவருக்கு ஹிந்தி படிக்கத் தெரியாவிட்டால், இந்த இணையதளத்தைப் பயன்படுத்த முடியாது. ஆங்கிலத்திற்கு மாறுவதற்கான விருப்பம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அது ஏதோ ஒரு மூலையில் இருக்கிறது.
அதைக் கண்டுபிடிக்க மொழி என்பதை இந்தியில் குறிக்கும் “भाषा”(பாஷா) என்பதை உங்களுக்குப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஆங்கிலம் இயல்பு மொழியாக இருந்த பழைய இணையதளத்தில் என்ன தவறு? இந்தி பேசாத மாநிலங்களின் குடிமக்கள் என்ன செய்வார்கள்?” என்று விமர்சித்துள்ளது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்
“இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது இணையத்தள முகப்பை இந்தியில் மாற்றி உள்ளது. ஆங்கிலத் தெரிவு இருக்கிறது என்பதையே இந்தியில் “பாஷை” என்று எழுதியிருக்கிறார்கள்.
எல். ஐ. சி யின் வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் முயற்சியைக் கண்டிக்கிறேன். ”
எல்.ஐ.சி. இணையதள பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனைச் சரி செய்து வருவதாகவும், விரைவில் இந்த பிரச்சினை சரியாகி மீண்டும் இயல்பு மொழியாக ஆங்கிலத்திலும் மாற்றப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இப்படி தொடர்ச்சியான எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையிலும், தற்போது வரை எல் ஐ சி முகப்பு பக்கம் இந்தி மொழியிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
எங்கு பார்த்தாலும் லஞ்சம்! – டெல்லி கிரிக்கெட் சங்கம் இப்படியா?