ஸ்டாலின் தேர்வு செய்த புதிய உள்துறை செயலாளர்: யார் இந்த தீரஜ் குமார்?

அரசியல் தமிழகம்

தமிழ்நாட்டின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் கொலை, கொள்ளை, வழிபறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகின்றன.

செங்கல்பட்டு, மரக்காணம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்… அதைத்தொடர்ந்து, பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சேலம் அதிமுக பிரமுகர் சண்முகம், நாதக நிர்வாகி பாலசுப்பிரமணியன் என அரசியல் கட்சியைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கொலை என அடுத்தடுத்த சம்பவங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

“முதல்வர் தான் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்று சொல்கிறார். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குற்றச் செயல்கள் நடக்கின்றன. முதல்வர் கையில் இருக்கும் காவல்துறை என்ன செய்கிறது எனத் தெரியவில்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது” என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன.

இந்தநிலையில் தான் நேற்று (ஜூலை 16) மாவட்ட ஆட்சியர்கள் உட்பட தமிழகத்தில் 65 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதில் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் மாற்றம் செய்யப்பட்டது கவனம் பெற்றது. அமுதா தற்போது வருவாய்த் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின், பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த அமுதாவை மத்திய அரசு விடுவித்தது. அப்போது தமிழக அரசே அமுதா ஐஏஎஸ்-ஐ கேட்டு மாநிலத்துக்கு அழைத்ததாகத் தகவல் வந்தது.

முதலில் அவர் ஊரக வளர்ச்சித் துறையில் நியமிக்கப்பட்ட நிலையில், பின்னர் உள்துறைக்கு மாற்றப்பட்டார். முன்னதாக கலைஞரின் இறுதிச் சடங்கில் அமுதா செய்த பணிகள் முதல்வர் ஸ்டாலின் மனதில் இடம்பெறச் செய்தது.

இப்படி ஸ்டாலின் குட்புக்கில் இடம்பெற்றிருந்த அமுதா, சட்டம் ஒழுங்கை கையாலும் முக்கிய துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தற்போது உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இவர்?

தீரஜ் குமார் 1970ஆம் ஆண்டு பிகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். பி.டெக் சிவில் இன்ஜினியரிங்க் படித்த தீரஜ்குமார், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

இவர் 1993 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. அமுதாவை விட ஒரு வருடம் சீனியர். பெங்களூருவில் உள்ள ஐஐஎம்-ல் ஐஏஎஸ் பயிற்சி பெற்ற அவர், 1996ஆம் ஆண்டு கோவையில் இணை ஆட்சியராக பணியாற்றினார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு பதவிகளை வகித்த தீரஜ் குமார் 2000ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட நகர்ப்புற மேலாண்மை ஆணையராக இருந்தார்.

11.06.2001 அன்று திருவண்ணாமலை ஆட்சியராகப் பொறுப்பேற்ற அவர் 2004 வரை 4 வருடங்கள் அம்மாவட்டத்தில் பதவி வகித்தார்.

2004ல் சேலம் தொழில்துறை மேலாண் இயக்குநராக மாற்றப்பட்ட அவர், 2011 முதல் 2017 வரை மத்திய அரசில் பணி புரிந்தார்.

2017ல் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்த தீரஜ் குமார், இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றினார்.

திமுக ஆட்சிக்கு வந்த 2021ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 2023 ஆம் ஆண்டு வணிக வரித்துறை செயலாளராக பணியமர்த்தப்பட்டார்.

தற்போது, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக இருந்த தீரஜ்குமார் உள்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

‘இப்படி பல்வேறு துறைகளில் பணியாற்றிய தீரஜ் குமார், கண்டிப்பான அதிகாரி. தனக்குக் கொடுக்கப்பட்ட துறைகளில் அரசியல் பார்க்காமல் வேலை செய்யக் கூடியவர்’ என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்.

தீரஜ் குமார் உள்துறைக்கு மாற்றப்பட்டிருப்பது குறித்து போலீஸ் தரப்பில், ‘டிஜிபி அலுவலகத்திலிருந்து ஒரு கோப்பை அனுப்பினால், அதைக் குறி போட்டு அமுதா திருப்பி அனுப்பிவிடுவார். அதிகாரிகளை எடுத்த எடுப்பில் சஸ்பெண்ட் செய்துவிடுவார். இதனால் டிஜிபி அலுவலகத்துக்கும் அவருக்கும் இடையே உரசல் போக்கு ஏற்பட்டு அதிருப்தி இருந்து வந்தது. இந்நிலையில்தான் அமுதா ஐஏஸ் மாற்றப்பட்டு, தீரஜ் குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கும் போலீசாருக்கும் இடையே சுமுகமான போக்கு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்கிறார்கள்.

இவர் பொறுப்பேற்ற பிறகாவது மாநிலத்தில் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறையுமா? போலீசாருக்கான அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படுமா? எனப் பல எதிர்பார்ப்புகள் பொதுமக்கள் மற்றும் போலீசார் மத்தியிலிருந்து வருகிறது.

சவாலான நேரத்தில் தீரஜ் குமாரை ஸ்டாலின் களமிறக்கியுள்ள நிலையில், இனி காவல்துறையினரின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த ரம்பா : புகைப்பட தொகுப்பு இதோ!

15 வயது சிறுவனுக்கும், 9 வயது சிறுமிக்கும் திருமணம் : பெற்றோர் மீது வழக்குப்பதிவு!

+1
0
+1
0
+1
0
+1
9
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *