சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிமைக்குழு மற்றும் சட்டப்பேரவை செயலர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 8 ) தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் எடுத்து வந்ததாக அப்போதையை எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ய வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பிய நடைமுறையில் அடிப்படை தவறு இருப்பதாக அதனை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து சபாநாயகர் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை உரிமைக்குழு மற்றும் பேரவை செயலர் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலம்பண்ணன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கை தற்போது விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை என்று வாதம் செய்தனர்.
இந்த வாதத்தை பதிவு செய்துகொண்ட சென்னை உயர்நீதிமன்றம் உரிமைக்குழு மற்றும் சட்டப்பேரவை செயலர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
செல்வம்
“வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை” – தமிழக அரசு
ஸ்டான்லி, தர்மபுரி மருத்துவக் கல்லூரி இயங்குமா? மா.சு தகவல்!
துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் அழுத்தம்: பொன்முடி குற்றச்சாட்டு!