வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஜனவரி 26 மாலை நடந்த தேநீர் விருந்து காட்சிகள் இன்ஸ்டாவில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“கடந்த ஒரு மாதமாகவே தமிழக ஆளுங்கட்சியான திமுகவுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கும் இடையிலான அரசியல், நிர்வாக மோதல்கள் உச்சம் அடைந்தன. காசி தமிழ்ச் சங்கமம் விழாவுக்கு சென்று வந்தவர்களை பாராட்டிய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி,
’தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பதே பொருத்தமாக இருக்கும்’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல கட்சி சாராத பல்வேறு எழுத்தாளர்கள் சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும்போதே புத்தாண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி ஒன்பதாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதில் ஆளுநர் ஆற்றிய உரையில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்து இருந்த உரையின் சில பகுதிகளை நீக்கியும் சில பகுதிகளை சேர்த்தும் வாசித்தார்.
இது அடுத்த சர்ச்சையை கிளப்பியது. சபாநாயகர் அருகில் ஆளுநர் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் போதே முதலமைச்சர் ஸ்டாலின் எழுந்து ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை வாசித்தார். இதை தாமதமாக உணர்ந்து கொண்டு ஆளுநர் ரவி விருட்டென சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

இதன் பிறகு நடந்த ஆளுநர் மாளிகையின் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயர் தவிர்க்கப்பட்டு தமிழகம் என்று அச்சிடப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசின் இலச்சினையான ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் நீக்கப்பட்டு இந்திய அரசின் இலச்சினை இடம் பெற்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பதும் தவிர்க்கப்பட்டது. இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார் ஆளுநர்.
தமிழ்நாடு ஆளுநர் ரவி மீது புகார்களை அடுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் முர்முவிடம் கொடுத்தார்கள்.
இதையடுத்து டெல்லிக்கு அழைக்கப்பட்ட ஆளுநரிடம் பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தரப்பில் சில தீவிரமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.
‘தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி தீவிர அக்கறையோடு இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் தமிழ் உணர்வோடு சென்று அவர்களை வயப்படுத்த வேண்டும் என்பதே மோடியின் விருப்பம்.
அதனால்தான் காசி தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ்நாட்டோடு பண்பாட்டு உறவை பேண விரும்புகிறார் மோடி. ஆனால் ஆளுநராகிய நீங்கள் தமிழ்நாடு என்று சொல்ல வேண்டாம் என்பது போன்ற கருத்துக்களை கூறி தமிழ்நாட்டு மக்களிடமே உங்களுக்கு எதிரான ஒரு மனநிலையை உருவாக்கி விட்டீர்கள்.
இது பாஜகவுக்கு தான் சங்கடத்தை கொடுக்கும். நிர்வாக ரீதியாக தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் பணியை மேற்கொள்ளுங்கள். இது போன்ற பொதுமக்கள் புண்படும் விஷயங்களை கையாள வேண்டாம்’ என்று டெல்லியில் ஆளுநருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குடியரசு தின தேநீர் விருந்து அழைப்பிதழில் பொங்கல் விழா அழைப்பிதழில் இல்லாத பல அம்சங்கள் இருந்தன. தமிழ்நாடு ஆளுநர் என்றும் தமிழ்நாடு அரசின் இலச்சினை இடம் பெற்றும் திருவள்ளுவர் ஆண்டு என்று வார்த்தைகள் இடம்பெற்றும் குடியரசு தின ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டது.
ஆனபோதும் இந்த அழைப்பை திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள் ஆகியோர் ஏற்கவில்லை. ஆளுநரின் அழைப்பை நிராகரிக்கிறோம் என்று திருமாவளவன் முதலில் அறிவித்தார்.
இந்த நிலையில் 25ஆம் தேதி இரவு ஆளுநர் ரவி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து தேநீர் விருந்தில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரோடு மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
மேலும் விருந்துக்கு முன்பு ஆளுநரோடு முதலமைச்சர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகி திமுகவுக்குள்ளும் திமுக கூட்டணிக்குள்ளும் சலசலப்புகளை ஏற்படுத்தின.
குடியரசு தினத்தன்று ஆளுநர் பங்கேற்கும் தேசியக் கொடி ஏற்றும் விழாவில் முதலமைச்சர் பங்கேற்பது அவரது அரசியல் சாசன கடமை. ஆனால் இது போன்ற தேநீர் விருந்துகளை முதலமைச்சர் புறக்கணிக்கலாம்.
திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்த விருந்தைப் புறக்கணித்தும் திமுக தலைவவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது படை பரிவாரங்களோடு இந்த விருந்தில் கலந்து கொண்டது கூட்டணி கட்சித் தலைவர்களான திருமாவளவன், வைகோ, கே எஸ் அழகிரி, இடதுசாரி தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டணிக்குள் தங்கள் கோபதாபங்களை வெளிப்படையாக அவர்கள் காட்டாவிட்டாலும் உள்ளுக்குள் ஆவி பறக்க பேசிக்கொள்கிறார்கள்.

ஸ்டாலினுக்கு கூட்டணிக் கட்சியினரை விட ஆளுநர் முக்கியமாகி விட்டாரா என்ற கேள்விகளும் கூட்டணி கட்சி தலைவர்களிடத்திலேயே எழுந்திருக்கின்றன. ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி இது பற்றி பகிரங்கமாக வெளிப்படுத்தவும் அவர்கள் யோசித்து வருகிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
இடைத்தேர்தல் : கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்த பழனிசாமி
மருமகளுக்கு ’மறுமணம்’ செய்து வைத்த மாமனார்