இளைஞர்கள் மற்றும் மகளிரை ஈர்க்கும் வகையில் பணியாற்றுங்கள் என நேற்று (நவம்பர் 9) விருதுநகரில் திமுக நிர்வாகிகளை சந்தித்த அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கோவையை அடுத்து கள ஆய்வு பணி மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு பட்டாசு ஆலை, அரசு குழந்தைகள் காப்பகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து விருதுநகர் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பங்கேற்று, 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
அப்போது கட்சிப் பணிகள், தேர்தல் குறித்த விவரங்களை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கையில் டேட்டாக்களை வைத்துக் கொண்டு அவர் கேள்விகளைக் கேட்டதால் நிர்வாகிகள் சிலர் ஷாக் ஆகினர்.
அலட்சியம், மெத்தனம் கூடாது!
தொடர்ந்து அவர் பேசுகையில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 100-க்கு 100 வெற்றியை நாம் பெற்றோம். அதுபோன்றே 2026 சட்டமன்றத் தேர்தலிலும் 100% வெற்றியைப் பெற்று ஆட்சியமைப்போம்.
அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அதேவேளையில், இதை நினைத்துக் கொண்டு அலட்சியமாகவும் மெத்தனமாகவும் இருந்து விடக்கூடாது.
நேற்றுகூட, கொளத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட “என் உயிரினும் மேலான” பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பேச்சாளர்கள் பங்கெடுத்து இருந்தார்கள்.
இந்தப் போட்டியில் பங்கேற்ற பேச்சாளர்களைப் பயன்படுத்தி நீங்கள் கூட்டங்கள் நடத்த வேண்டும். மக்களை சந்தித்து நம்முடைய கொள்கைகளை, சாதனைகளைச் சொல்லுங்கள். மாதம் ஒரு சிறு கூட்டம் போதும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக 10 அல்லது 15 இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை!
இளைஞர்கள் மற்றும் மகளிரை ஈர்க்கும் வகையில் பணியாற்றுங்கள்!
நமது அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் பயன் பெற்றுள்ளது. இதனை மக்களுக்கு உணர்த்தும்படி நம் பிரச்சாரம் அமைய வேண்டும்.
அதை மக்கள் எளிமையாகப் புரிந்து கொள்வது மாதிரி துண்டுப் பிரசுரங்கள் வழங்க வேண்டும். தெருமுனைக் கூட்டங்கள், திண்ணைப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் தான் எதிர்கால விதைகள். இளைஞர்கள் மற்றும் மகளிரை ஈர்க்கும் வகையில் பணியாற்றுங்கள்.
அதேபோல், மகளிருக்காக ஏராளமான திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம். பெண்கள் ஆதரவை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு பெண் வாக்காளரையும் தேர்தலுக்கு முன்பாக மூன்று முறையாவது நேரில் சந்தித்து திட்டங்களை விளக்க வேண்டும் என்கிற அசைன்மெண்ட் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் திமுக பெண் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
அவர்கள் சென்று பார்க்கும்போது மகளிருக்கு என்று செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை நோட்டீஸாக அடித்து வழங்கச் சொல்லுங்கள். நம்முடைய சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான் நம்முடைய வேலை.
ஏழாவது முறையாக கழக ஆட்சி அமைய வேண்டும்!
இங்கு வந்திருக்கும் நிர்வாகிகள் பல்வேறு தொழில்கள் செய்கிறவர்களாக இருப்பீர்கள். உங்களின் வேலையில் கவனம் செலுத்துவது போன்றே, உங்கள் குடும்பத்துக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நேரம் ஒதுக்கிச் செலவிடுங்கள்.
உங்கள் பணிகளுக்கிடையே ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரத்தைக் கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாகக் கட்சிப் பணிக்கு ஒதுக்குங்கள்.
உங்களுக்கு நான் நிர்ணயித்துள்ள இலக்கு எவ்வளவு? 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். வேட்பாளர் யார் என்று தலைமைக் கழகம் அறிவிக்கும். வெற்றி பெறுபவர்தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
எனவே, திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரைச் சட்டமன்றத்துக்கு அனுப்ப உழைக்க வேண்டியது உங்கள் கடமை.
7 ஆவது முறையாக கழக ஆட்சி அமைய வேண்டும். விருதுநகரில் உள்ள 7 தொகுதிகளிலும் கழக கூட்டணி வெற்றி பெற வேண்டும் ” என்று ஸ்டாலின் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”எதிர்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயார்” : ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை!
ஹெல்த் டிப்ஸ்: மழை – குளிர்காலங்கள்… வீட்டில் இருக்க வேண்டிய முதலுதவிப் பெட்டி!