வைஃபை ஆன் செய்ததும், ‘சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்’ என்ற முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு இன்பாக்சில் வந்து விழுந்தது.
அரசின் விரிவான அறிவிப்பை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 9) காலை தலைமைச் செயலகத்தில் வெள்ள நிவாரணம் பற்றிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு கலந்துகொண்டனர். தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா,நிதித் துறைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டம் நடைபெறவும் கூட்டம் முடிந்து சில நிமிடங்களில் நிவாரணத் தொகை அறிவிப்பு வெளியிடவும் சென்னை திமுக எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேரடியாகவே வைத்த வேண்டுகோள்தான் காரணம் என்கிறார்கள் சென்னை திமுக வட்டாரங்களில்.
கடந்த சில நாட்களாகவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருக்கும் திமுக எம்.எல்.ஏ.க்களோடு அவ்வப்போது செல்போனில் பேசி வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஒவ்வொருவரிடமும், ‘இன்னிக்கு எந்தெந்த பகுதிக்கு போனீங்க? நிவாரண பணிகள் என்ன செஞ்சீங்க? உங்க பகுதியில வெள்ளம் வடிஞ்சிடுச்சா…?’ என்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்களது பணிகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது ஸ்டாலின், ‘மக்கள் எப்படி இருக்காங்க? அதைச் சொல்லுங்க’ என்று கேட்டுள்ளார். ‘மக்கள் நல்லா ரெஸ்பான்ஸ் பண்றாங்கண்ணே…’ என்று ஒரு எம்.எல்.ஏ. சொல்ல, ‘நானும் ஜீப்ல போய் பாத்துக்கிட்டுதான் இருக்கேன். சோசியல் மீடியாவுல எல்லாத்தையும் பாத்துக்கிட்டுதான்யா இருக்கேன். எனக்காக சொல்லாத, உண்மைய சொல்லுய்யா’ என்று கேட்டுள்ளார் முதலமைச்சர்.
அப்போது, ‘தலைவரே… ரொம்ப கஷ்டமா இருக்கு. சில ஏரியால உள்ள போகவே முடியல. மக்கள் கோவமா இருக்காங்க. இப்ப இருக்கிற கோபத்தை தணிக்கணும்னா உடனடியா வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியிடணும் தலைவரே.. இன்னும் ரெண்டு மூணு நாளாச்சுன்னா போராட்டம் அதிகமாகும்’ என்று எம்.எல்.ஏ.க்கள் முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
அதற்கு ஸ்டாலின், ‘2015 ல வெள்ளம் வந்தப்ப நாம எதிர்க்கட்சியா மக்களுக்காக வேலை செஞ்சோம். அப்ப அரசு மீது கோபத்தை வெளிப்படுத்தினாங்க. அதேபோலத்தான் இப்பவும் அரசு மீது கோபத்தை வெளிப்படுத்துறாங்க. நிவாரணம் அறிவிச்சுடுவோம்’ என்று அவர்களுக்கு பதில் கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் நேற்றே தலைமைச் செயலாளரிடம் பேசிய முதலமைச்சர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் இதுகுறித்து ஆலோசித்திருக்கிறார். 2015 வெள்ளம் பாதித்தபோது அப்போதைய அதிமுக அரசு 5 ஆயிரம் ரூபாய், 10 கிலோ அரிசி, வேட்டி-சேலை நிவாரணமாக வழங்கியது. அதையும் ஆராய்ந்து 6 ஆயிரம் ரூபாய் என்று நேற்று இரவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்டாலின்.
அதன் பின் இன்று காலை கோட்டையில் அமைச்சர்கள் அதிகாரிகளோடு ஆய்வு நடத்தி அதை இறுதி செய்தார். கூட்டம் முடிந்த சில நிமிடங்களிலேயே நிவாரண அறிவிப்பை வெளியிட்டார் ஸ்டாலின்.
இதை அறிந்து சென்னை திமுக எம்.எல்.ஏ.க்கள், மாசெக்கள்தான் மக்களை விட நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். ‘4 ஆயிரம் கோடி என்னாச்சு?’என்ற எதிர்க்கட்சிகளின் விவாதத்தை இந்த ஆறாயிரம் ரூபாய் மூடிவிடும் என்றும், மக்களின் கோபம் தணியும் என்றும் நம்புகிறார்கள் களத்தில் வேலை செய்யும் திமுகவினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
‘இவள எல்லாம் யாரு கட்டிப்பா’ விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா!
டீப் ஃபேக்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!