விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வு பணிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பட்டாசு ஆலை, மாணவிகள் காப்பகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
இரண்டாவது நாளான இன்று (நவம்பர் 10) ரூ.77 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பட்டம்புதூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார்.
அதன்படி, பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.
மாவட்ட அளவில் நிறைவேற்றும் வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரின்கீழ், தனி நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டு, முதற்கட்ட உதவியாக ரூ.5 கோடி வழங்கப்படும்.
காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் இருக்கும் கண்மாய்கள் மற்றும் அணைக்கட்டுகள் ரூ. 17 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
காரியாப்பட்டி வட்டத்திலுள்ள தெற்காற்றின் குறுக்கே ரூ.21 கோடி மதிப்பீட்டில் புதிய அணை ஒன்று கட்டப்படும்.
விருதுநகர் வட்டத்தின் கௌசிகா ஆறு, அருப்புக்கோட்டை வட்டத்தின் கஞ்சம்பட்டி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் ரூ.41 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் பகுதிகளின் 22 கண்மாய்கள், ரூ. 18.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
காலிங்கபேரி, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம் மற்றும் கோல்வார்பட்டி அணைகள் ரூ. 23.30 கோடியில் மேம்படுத்தப்பட்டு, ரூ. 2.74 கோடியில் சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்கள் அமைக்கப்படும்.
விருதுநகர் மாவட்டத்தின் எதிர்கால தொழிற்துறை வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
அருப்புக்கோட்டை அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் ரூ. 350 கோடியில் புதிய சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சிவகாசி மாநகராட்சியில், ரூ. 15 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
விருதுநகர் நகராட்சியில், ரூ. 24.50 கோடியில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும்.
சாத்தூர் நகராட்சியில் ரூ. 2 கோடியில் பூங்கா மற்றும் சிறு பாலம் அமைக்கப்படும்.
இராஜபாளையம் நகராட்சியில் ரூ. 13 கோடியில் மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதோடு, கோடை நீர்த்தேக்கம் ரூ. 5 கோடியில் மேம்படுத்தப்படும்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ. 3 கோடியில் மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதோடு, ரூ. 1.50 கோடியில் பூங்கா அமைக்கப்படும்.
விருதுநகர் நகராட்சியில் ரூ. 25 கோடியிலும் அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ. 10.50 கோடியிலும், காரியாபட்டி நகரத்தில் ரூ. 12 கோடியிலும் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு பக்தர்களின் பயன்பாட்டுக்காக, கழிவறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் ரூ. 2.10 கோடியில் அமைக்கப்படும்.
வத்திராயிருப்புக்கு அருகே பிளவக்கல் அணைப் பகுதியில் ரூ. 10 கோடியில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள சுற்றுலாத் தலமான சாஸ்தா கோவில் அருவி பகுதியில் ரூ. 1.70 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்” ஆகிய திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”மக்கள் திட்டங்களுக்கு உங்கள் பெயரையா வைக்கமுடியும்?”: எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்