ஸ்டாலின் Vs அண்ணாமலை வார்த்தை போர்… என்ன பிரச்சனை?

Published On:

| By Selvam

மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மத்திய அரசு பிளாக் மெயில் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இன்னும் எத்தனை காலத்திற்கு காலாவதியான கொள்கையை தமிழக மக்கள் மீது திணிப்பீர்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். Stalin annamalai heated debate

மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் நேற்று (பிப்ரவரி 16) தெரிவித்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “They have to come to the terms of the Indian Constitution” என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை ‘rule of law’ என்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்.

ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை அளித்துள்ள பதிலில்,

“முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?

தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை?

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். Stalin annamalai heated debate

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share