திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களிலும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது புதிய விஷயம் இல்லை.
ஆனால் அக்டோபர் 28 தொடங்கி அக்டோபர் 30-ஆம் தேதி வரை அவரது பரபரப்பான பயணப் பட்டியல் வித்தியாசமாகவும் கொஞ்சம் புதியதாகவும் இருக்கிறது.
திமுக இளைஞர் அணி சார்பில் கடந்த சில மாதங்களாக திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்தப்பட்டு வருகிறது. அறிவாலயத்தில் நடைபெற்ற அதன் தொடக்க விழா கருத்தரங்கத்தில் இளைஞர் அணி செயலாளர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று… தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்தும் பயிற்றுநர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதன் பிறகு அவர் நேரடியாக எந்த பயிற்சி பாசறையிலும் கலந்து கொள்ளவில்லை. சுமார் 210 தொகுதிகளில் திராவிட மாடல் பாசறை நடைபெற்று முடிந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டு தொகுதிகளுக்கும் சேர்த்து நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறையில் அக்டோபர் 29ஆம் தேதி கலந்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் எ.வ.வேலு தனது தெற்கு மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கும் சேர்த்து திராவிட மாடல் பயிற்சி பாசறையை நடத்த ஏற்பாடு செய்தார். இந்த பாசறை மற்ற மாவட்டங்களில் இருந்து சற்று கவனிக்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதற்காக உதயநிதி ஸ்டாலினை அழைத்தார் வேலு.
ஆனால் உதயநிதியோ, “இதுவரை திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பிரத்தியேகமாக நான் கலந்து கொண்டதில்லை. கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவையும் சேர்த்து வையுங்கள் வருகிறேன்” என்று வேலுவிடம் கூறியுள்ளார். ”அதற்கென்ன” என்று சிரித்த வேலு, இதுவரை உதயநிதி ஸ்டாலின் ஒரே நாளில் இத்தனை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதில்லை என்ற புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர், தற்போதைய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஆகியோரது பாணியில் ஒரு நாள் முன்னதாகவே சென்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் உதயநிதி.
28ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட உதயநிதிக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பெண்ணாத்தூரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அருணை கெஸ்ட் ஹவுஸில் அன்று இரவு தங்கிய உதயநிதி மறுநாள் அக்டோபர் 29ஆம் தேதி இத்தனை நிகழ்ச்சிகளா என்று திக்குமுக்காடிவிட்டார்.
காலையில் திருவண்ணாமலை திமுக மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்று விழா, முன்னாள் எம்.எல்.ஏ. மறைந்த திருவேங்கடத்தின் இல்லம் சென்று அவரது படத்துக்கு மரியாதை, திருவண்ணாமலையில் இருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் கலசப்பாக்கத்தில் வடக்கு, தெற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய எட்டு மாவட்டங்களுக்கும் சேர்த்து திராவிட மாடல் பாசறை,
மீண்டும் திருவண்ணாமலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட கட்சி நிகழ்வுகளும், அருணை மெட்ரிக் பள்ளி திறப்பு விழா, அருணை மருத்துவமனையில் இதய சிகிச்சை கருவிகள் துவக்க விழா என்று காலை முதல் இரவு வரை உதயநிதிக்கு அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார் அமைச்சர் எ.வ.வேலு.
திருவண்ணாமலையில் இருந்து திராவிட மாடல் பாசறைக்கு செல்லும் வழியெங்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்குவதைப் போன்றே முளைப்பாரி, பூரண கும்பம், சாலையோரம் சிறுவர்கள், பொதுமக்கள் என உதயநிதிக்கு வரவேற்பு ஏற்பாடுகள் செய்திருந்தார் வேலு. காலை 9.30க்கு போய் சேரவேண்டிய பாசறைக்கு உதயநிதி செல்லும்போது மணி 11 ஆகிவிட்டது.
இந்த நிலையில்தான் அன்று மாலை, ‘ உடல் நலக் குறைவால் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னுக்கு செல்ல இயலாததால் அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் செல்ல தயாராகவும் என்று’ சென்னையில் இருந்து உதயநிதிக்கு மெசேஜ் வந்தது. உதயநிதி 30 ஆம் தேதி காலைதான் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சியில் சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாசெவுமான வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாடு செய்த பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள், பொற்கிழி வழங்கும் விழாவிலும்… சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாசெவுமான உதயசூரியனின் மகன் பர்னாலா திருமண விழாவிலும் கலந்துகொள்ள நேரம் கொடுத்திருந்தார் உதயநிதி.
உதயநிதியின் தேதி வாங்கிவிட்டதால் கள்ளக்குறிச்சியில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்த வசந்தம் கார்த்திகேயனுக்கும், உதயசூரியனுக்கும், ‘சின்னவர் நாளைக்கு வர்றது சந்தேகம்தான். அவர் இங்கேர்ந்து நேரா பசும்பொன் போக வேண்டியிருக்கு’ என்று சொன்னதும் ஷாக் ஆகிவிட்டார்கள். ‘வந்தே தீரணும். தலைவருக்கு நிகரான வரவேற்பு ஏற்பாடுகள் செஞ்சிருக்கோம்’ என்று மல்லுக்கட்ட ஆரம்பித்தனர்.
அதற்குள் அக்டோபர் 30 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு சேலம் விமான நிலையத்திலிருந்து சார்ட்டடு விமானம் ரெடி செய்யப்பட்ட தகவல் உதயநிதியை வந்தடைந்தது. அவரும், ‘கள்ளக்குறிச்சிக்கு வர்றேனு சொல்லிட்டேன். அங்கே கண்டிப்பா போகணும்’ என்று சொல்ல, முதல் நாள் இரவு, ‘உதயநிதி வருவார். ஆனால் இருபது நிமிடத்துக்கு மேல் இருக்க முடியாத சூழல்’ என்று வசந்தம் கார்த்திகேயனுக்கும், உதயசூரியனுக்கும் தகவல் சொல்லப்பட்டது.
அக்டோபர் 30 ஆம் தேதி காலை சீக்கிரமே திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டார் உதயநிதி. அவருடன் அமைச்சர் எ.வ. வேலுவும் சென்றார். கள்ளக்குறிச்சி டோல்கேட்டில் இருந்து பிரம்மாண்ட வரவேற்பை வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாக மணலூர் பேட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 70 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியேற்றினார். டோல்கேட்டிலிருந்து கள்ளக்குறிச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கும் இடத்துக்கு காரில் போனால் இரு நிமிடங்கள்தான். ஆனால் உதயநிதிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பால் டோல் கேட்டில் இருந்து அவர் விழாவுக்கு வர 35 நிமிடங்கள் ஆனது.
‘தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்களிலேயே கள்ளக்குறிச்சிதான் மிக இளைய மாவட்டம். அதேபோல் திமுகவிலும் இதுதான் இளைஞர்கள் மாவட்டம். மாவட்டச் செயலாளர் எனக்கு 44 வயது ஆகிறது. அவைத் தலைவருக்கே 45 வயதுதான் ஆகிறது’ என்று மாசெ வசந்தம் கார்த்திகேயன் சொல்ல, அதை உதயநிதி ரசித்தார். அதன் பின் உதயநிதி பேசும்போது, “நான் உங்கள் மாவட்டத்துக்கு வரவேண்டுமென்றால் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடத்தினால்தான் வருவேன். இன்று கட்சியின் மூத்தவர்களை பார்த்தது எனக்கு பெருமை” என்றார்.
25 நிமிடங்களில் பல கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு அவசரமாக கச்சிராபாளையத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாசெ உதயசூரியனின் மகன் பர்னாலா திருமணத்தை நடத்தி வைத்தார் உதயநிதி. அங்கே பேசிய அவர், “கலைஞரையும் தமிழையும் போல தலைவரையும் உழைப்பையும் போல வாழ வேண்டும் என்று பலர் வாழ்த்தினர். ஆனால் நான் எப்படி வாழ்ந்துவிடக் கூடாது என்று சொல்கிறேன். ஓபிஎஸ், ஈபிஎஸ் போல இருக்க வேண்டாம்” என்று அரசியல் பஞ்ச் வைத்துவிட்டு அங்கிருந்து வேகவேகமாக சேலம் புறப்பட்டார். சேலத்தில் இருந்து விமானத்தில் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலமாக பசும்பொன் சென்று தேவர் குருபூஜையில் கலந்துகொண்டு மரியாதை செய்தார் உதயநிதி. அதன் பிறகே மீண்டும் அவர் சென்னை திரும்பினார்.
நம்மிடம் பேசிய இளைஞரணிப் புள்ளிகள், “உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓய்வே இல்லாமல் அலைந்திருக்கிறார். ஆனால் ஒரு மாவட்டத்துக்கு சென்று முதல் நாளே தங்கி மறுநாள் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அப்படியே அடுத்த மாவட்டங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்ற கலைஞர், ஸ்டாலின் பாணி அரசியலை சமீபமாகத் தொடங்கியிருக்கிறார். முதல்வர் பசும்பொன் செல்ல முடியாத நிலையில் உதயநிதி செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்காக ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை தவிர்க்க மறுத்துவிட்டார் உதயநிதி. தலைகாட்டிவிட வேண்டுமே தவிர தவிர்க்கக் கூடாது என்ற அவரது பாலிசி கட்சியினரைக் கவர்ந்துள்ளது.
முதல்வருக்கு முதுகுவலி தொந்தரவு இருப்பதால் இனி நீண்ட தூரப் பயணங்களை ஸ்டாலின் தவிர்க்க மருத்துவர்கள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அதேநேரம் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இதேபோன்ற நீண்ட தூரப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள உதயநிதிக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இனி முதல்வர் மூலவரைப் போல சென்னையில் இருந்து வழி நடத்த உதயநிதி உற்சவர் போல மாவட்டங்கள் தோறும் பயணம் செய்ய இருக்கிறார்” என்கிறார்கள்.
பயணம் முடித்து சென்னை திரும்பிய உதயநிதி திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் அமைச்சர் வேலு தொடங்கி, வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் வரை மாவட்ட நிர்வாகிகளுக்கு போன் செய்து சிறப்பான ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்து, முதல்வரிடமும் இந்த பயணம் பற்றி மகிழ்ச்சியோடு தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.
திருவண்ணாமலையில் வேலு போட்ட ரூட்டில் இனி மற்ற மாவட்டங்களுக்கும் உதயநிதி தொடர்ந்து பயணிக்க இருக்கிறார் என்பதே அறிவாலயத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
-வேந்தன்
திடீர் பயணமாக டெல்லி விரைந்த ஆளுநர்!
“என்னை கொலை செய்யத் திட்டம்?” மோடி- அமித் ஷா மீது சுவாமி பகீர் புகார் பின்னணி!